சென்னை: சென்னை ரயில்வே கோட்டம் சார்பில் இயக்கப்படும் 4 வந்தே பாரத் ரயில்களுக்கும் பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. கடந்த அக்டோபர், நவம்பர் ஆகிய இரு மாதங்களில் மட்டும் இந்த ரயில்களில் மொத்தம் 3 லட்சத்து 3 ஆயிரத்து 469 பேர் பயணம் செய்துள்ளனர். நாட்டில் அதிவேகத்தில் இயக்கப்படும் ரயிலாக வந்தே பாரத் ரயில் இருக்கிறது. இந்த ரயில் சேவையை, புதுடில்லி-வாரணாசி இடையே பிரதமர் மோடி கடந்த 2019-ல் தொடங்கி வைத்தார். இதன்பிறகு, பல்வேறு வழித்தடங்களில் 45-க்கும் மேற்பட்ட வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன.
இவற்றில், தெற்கு ரயில்வேயில் சென்னை சென்ட்ரல் - கோயம்புத்தூர், சென்னை சென்ட்ரல் - மைசூர், சென்னை சென்ட்ரல் - விஜயவாடா, சென்னை எழும்பூர் - திருநெல்வேலி, திருவனந்தபுரம் - காசர்கோடு உள்ளிட்ட வழித் தடங்களில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த ரயில்களுக்கு பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத் துள்ளது.
இதுகுறித்து சென்னை ரயில்வே கோட்ட அதிகாரிகள் கூறியதாவது: இந்த 4 வந்தே பாரத் ரயில்களுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. கடந்த அக்டோபர், நவம்பர் ஆகிய இரு மாதங்களில் மட்டும் இந்த ரயில்களில் இருமார்க்கமாக மொத்தம் 3 லட்சத்து 3 ஆயிரத்து 469 பேர் பயணம் செய்துள்ளனர்.
தற்போது, தென் மாவட்டத்துக்கு வந்தே பாரத் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இதுபோல, எந்தெந்த வழித்தடங்களில் பயணிகளின் தேவை அதிகமாக உள்ளது என்பதை ஆய்வு செய்து, கூடுதல் வந்தே பாரத் ரயில்கள் இயக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.