சென்னை: மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பிரதமரை வரவேற்று வெளியிட்ட அறிக்கை: திருச்சியில் ரூ.19,850 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களை தொடங்கி வைக்க, வரும் பிரதமர் மோடியை தமிழக மக்கள் சார்பாக வரவேற்கிறேன். திருச்சியில் உள்ள பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் 38-வது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ளும் அவர், அதைத்தொடர்ந்து ரூ.1,100 கோடியில் கட்டுப்பட்டுள்ள திருச்சி விமான நிலையத்தின் புதிய முனையத்தை திறந்து வைக்கிறார்.
பின்னர் சேலம்-மேட்டூர், மதுரை-தூத்துக்குடி இடையே இரட்டை ரயில்பாதைகள், திருச்சி- மானாமதுரை- விருதுநகர், செங்கோட்டை- திருச்செந்தூர், விருதுநகர்- தென்காசி இடையே மின்சார ரயில் பாதைகளையும் தொடங்கி வைக்கிறார். இதையடுத்து திருச்சி - கல்லகம் தேசிய நெடுஞ்சாலை, காரைக்குடி- ராமநாதபுரம் இருவழிச்சாலை, சேலம்- வாணியம்பாடி 4 வழிச்சாலை திட்டங்களையும், எண்ணூர் காமராஜர் துறைமுகத்தின் பொது சரக்குக் கப்பல் நிறுத்துமிடம், ரூ.9 ஆயிரம் கோடி மதிப்பிலான பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு திட்டங்கள் போன்றவற்றை தொடங்கி அடிக்கல் நாட்டுகிறார்.
கடந்த 9 ஆண்டுகளில் இதுவரை இல்லாத அளவில் பல்வேறு திட்டங்களை தமிழகத்துக்காக பிரதமர் மோடி செயல்படுத்தி இருக்கிறார். ஆனால் தமிழகத்தில் ஆட்சியில் இருப்பவர்கள் அரசியல் காழ்ப்புணர்ச்சியால் மத்திய அரசுக்கு ஒத்துழைக்க மறுத்து, பாஜகவுக்கு எதிராக விஷம பிரசாரத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்த பிரச்சாரம் மக்களிடம் எடுபடாது. சுயநல அரசியல் செய்யும் கட்சிகளை தமிழக மக்கள் அடையாளம் கண்டு நாடாளுமன்ற தேர்தலில் தக்கபாடம் புகட்டுவார்கள். இத்தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி நாடு முழுவதும் வெற்றிபெறுவதுடன், தமிழகம், புதுச்சேரியிலும் மகத்தான வெற்றியை பெறும். மோடி மீண்டும் பிரதமராக பதவி ஏற்பார். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.