கோவை: தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் வெம்பூர் பகுதியை சேர்ந்தவர் காமாட்சி பாண்டியன் ( 42 ). இவருடைய மனைவி மீனாட்சி ( 36 ). காமாட்சி பாண்டியன் கோவை சிங்கா நல்லூரில் குடும்பத்துடன் தங்கி இருந்து தள்ளு வண்டியில் காய் கறி வியாபாரம் செய்து வருகிறார்.
இவர்களது மகன் மோனீஷ் ( 10 ) சிங்கா நல்லூரில் உள்ள பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த வாரம் மோனீசுக்கு கடுமையான காய்ச்சல் ஏற்பட்டது. இதையடுத்து, சிறுவனை பெற்றோர் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். மருத்துவர்கள் சிறுவனை பரிசோதித்த போது டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. தொடர்ந்து, சிறுவன் கடந்த 29-ம் தேதி மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி மறு நாள் உயிரிழந்தார். இது தொடர்பாக சிங்கா நல்லூர் போலீஸார் விசாரிக்கின்றனர்.