தமிழகம்

முதல்வர் வாகனத்துடன் கருப்பு நிற ‘கான்வாய்’கள்: புத்தாண்டு முதல் பயணிக்கின்றன

செய்திப்பிரிவு

சென்னை: புத்தாண்டு முதல் கருப்பு நிற‘கான்வாய்’ வாகனங்கள் முதல்வர்மு.க.ஸ்டாலினுடன் பயணிக்கத் தொடங்கியுள்ளன. குடியரசுத் தலைவர், துணைத் தலைவர், பிரதமர், முதல்வர்கள் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பயணிக்கும்போது, அவர்களுடன் பாதுகாப்புக்காக ‘கான்வாய்’ என அழைக்கப்படும் இந்த வாகனங்கள் முன்னும் பின்னும் செல்லும். இந்த வாகனங்களில் பாதுகாப்பு அதிகாரிகள், உபகரணங்கள் மற்றும் ஜாமர் கருவிகள்,கேமராக்கள் பொருத்தப்பட்டி ருக்கும். குடியரசுத் தலைவர், துணைத் தலைவர் மற்றும் பிரதமர் ஆகியோருக்கு எஸ்பிஜி அதிகாரிகள் பாதுகாப்புக்கு வருவார்கள். முதல்வர்களைப் பொறுத்த வரை, ‘கோர்செல்’ எனப்படும் தனிப்பிரிவு காவலர்கள் பாதுகாப்பு அரணாக செயல்படுவார்கள். இந்ததனிப்பிரிவில் கூடுதல் எஸ்பி.க்கள், டிஎஸ்பி.க்கள், இன்ஸ்பெக்டர் மற்றும் பாதுகாப்பு காவலர்கள் இருப்பார்கள்.

கூடுதல் பாதுகாப்பு அம்சங்கள்: முதல்வர் கான்வாயில் ஏற்கெனவே 6 வெள்ளை நிற வாகனங்கள் இருந்தன. இந்நிலையில், தற்போது கூடுதல் பாதுகாப்பு அம்சங்களை உள்ளடக்கிய நவீன 6 கருப்புநிற வாகனங்கள் வாங்கப்பட்டுள்ளன. அந்த வாகனங்கள் நேற்று முதல் பணியைத் தொடங்கின.

இந்த வாகனங்களில் 3 கண்காணிப்பு கேமராக்கள் உள்ளன.காரின் மேற்பகுதியில் அமைக்கப்பட்டிருக்கும் இந்த கேமராக்கள், சுற்றிலும் நிகழும் அனைத்தையும் படமாக்கும் வகையில் பொருத்தப்பட்டுள்ளது. முதல்வர் வாகனத்துடன் இந்த வாகனங்கள் செல்லும்போது, பாதுகாப்பு அதிகாரிகள் காரின் கதவருகில் நின்று பயணிக்கும் வகையில் தேவையான அமைப்புகள் இந்த வாகனங்களில் உருவாக்கப்பட்டுள்ளன.

நேற்று முதல் பயணம்: மற்ற வாகனங்களில் இருந்து தனித்து தெரியும் இந்த வாகனங்கள் புத்தாண்டு தினமான நேற்று முதல் முதல்வர் வாகனத்துடன் பயணிக்கத் தொடங்கின.

முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று காலை புத்தாண்டு வாழ்த்து பெற கோபாலபுரத்தில் உள்ள தனது தாயார் தயாளு அம்மாளை சந்திக்கச் சென்றார். அப்போது முதல்வர் வாகனத்துடன் இந்த புதிய வாகனங்கள் பயணித்தன.

குடியரசுத் தலைவர், பிரதமர் மற்றும் சில மாநில முதல்வர்களின் பாதுகாப்பு வாகனங்கள் போன்றே தமிழக முதல்வரின் பாதுகாப்பு வாகனமும் கருப்பு நிறத்தில் மாற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT