கோவில்பட்டி: கயத்தாறு அருகே தலையால் நடந்தான்குளம் கிராமத்தில் காட்டு பன்றிகளால் சுமார் 100 ஏக்கரில் பயிரிடப்பட்ட மக்காச்சோள பயிர்கள் சேதமடைந்ததால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
கயத்தாறு அருகே தெற்கு மயிலோடை ஊராட்சிக்கு உட்பட்ட தலையால் நடந்தான் குளம் கிராமத்தில் உள்ள மானாவாரி நிலத்தில் மக்காச் சோளம், உளுந்து, பாசி உள்ளிட்ட பயிர்களை விவசாயிகள் பயிரிட்டுள்ளனர். பெரும்பாலான நிலங்களில் மக்காச்சோளத்தை பிரதானமாக பயிரிட்டுள்ளனர். புரட்டாசி மாதம் மழையின்றி மக்காச்சோள பயிர்கள் முளைக்காததால் மீண்டும் நிலத்தில் உழவு மேற்கொண்டு மக்காச்சோள விதைகளை ஊன்றினர். தற்போது மக்காச்சோள பயிர்கள் நன்றாக வளர்ந்து அறுவடைக்கு தயாராக இருந்தது.
இந்நிலையில், நேற்று முன்தினம் நிலங்களுக்குள் புகுந்த காட்டுப்பன்றிகள், மான்கள் மக்காச்சோள பயிர்களை தின்று விட்டன. சுமார் 100 ஏக்கர் வரை மக்காச்சோள பயிர்கள் சேதமடைந்துள்ளன. இது குறித்து விவசாயிகள் மகேஷ் குமார், இசக்கியம்மாள், வேல்முருகன், இஸ்ரவேல், அக்னியம்மாள் ஆகியோர் கூறியதாவது: கடந்த சில ஆண்டுகளாக மழை பருவத்துக்கு பெய்யாததால் மசூல் எடுக்க முடியாமல் இருந்தது. கடந்த 5 ஆண்டுகளாக காட்டுப்பன்றிகள், மான்கள் தொல்லை அதிகமாக உள்ளது.
இந்தாண்டு மறு விதைப்பு செய்த மக்காச்சோளப் பயிர்களில் படைப்புழுவை கட்டுப்படுத்துவதே பெரிய வேலையாக இருந்தது. இதையெல்லாம் கடந்து தற்போது மக்காச்சோள பயிர்கள் அறுவடைக்கு தயாராக இருந்தன. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு நிலங்களுக்குள் புகுந்த காட்டுப் பன்றிகள், மான்கள் மக்காச்சோளக் கதிரஒ்களை தின்று சேதப்படுத்தி விட்டன. காட்டுப் பன்றிகள் கூட்டமாக வருவதால் அவற்றை எங்களால் எதிர்கொள்ள முடியவில்லை.
காட்டு விலங்குகளால் சுமார் 100 ஏக்கர் வரை மக்காச்சோள பயிர்கள் சேதமடைந்து விட்டன. எனவே, சேதமடைந்த பயிர்களை வருவாய்த் துறை, வேளாண் துறை அதிகாரிகள் பார்வையிட்டு, நிவாரணம் பெற்றுத்தர வேண்டும். காட்டுப்பன்றிகள், மான்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.