திருநெல்வேலி: ஆற்றை அளந்துபோடு, ஆக்கிரமிப்பை அழித்துப்போடு என்ற முழக்கத்துடன் தாமிரபரணியின் புனிதம் காக்க பல்வேறு தன்னார்வ அமைப்புகளும் களமிறங்கியிருக்கின்றன. தாமிரபரணியின் தூய்மையை நெடுங்காலம் பேணுவதற்கு நீண்ட கால திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்று இந்த அமைப்புகள் வலியுறுத்துகின்றன.
தாமிரபரணியில் பல்வேறு காலகட்டங்களில் ஏற்படும் வெள்ளத்துக்கு பிரதான காரணம் ஆக்கிரமிப்பு தான் என்பவை நீண்டகாலமாகவே பல்வேறு அமைப்புகளும் சுட்டிக்காட்டி வருகின்றன. ஆக்கிரமிப்பு என்பது வயல்வெளிகளாக, தோப்புகளாக, செங்கல் சூளைகளாக, வீடுகள், குடியிருப்புகள், கட்டடங்களாக, கல் குவாரிகளாக, பன்றி குடில்களாக, கல்லறை தோட்டங்களாக, தகன எரி மேடைகளாக பல்வேறு இடங்களில் அமைந்திருக்கின்றன. இவற்றை அகற்றுவதற்கு இதுவரை அரசுத் துறைகள் பெருமளவு அக்கறை காட்டவில்லை.
2012-ம் ஆண்டில் தாமிரபரணி பாதுகாப்பு இயக்கத்தின் வேண்டுகோளை ஏற்று, பல்வேறு தன்னார்வ அமைப்புகளின் ஒத்துழைப்புடன், போலீசாரையும் ஊர்க்காவல் படையினரையும் களமிறக்கி மாபெரும் தூய்மை பணி முகாம் நடத்த அப்போதைய திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் கருணாசாகர் நடவடிக்கை எடுத்திருந்தார்.
ஆற்றங்கரை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கைகளின் அடிப்படையில் திருநெல்வேலி மாநகரில், துவரை ஆபீஸ், கைலாசபுரம், சிந்து பூந்துறை, வண்ணார்பேட்டை போன்ற இடங்களில், நூற்றுக்கு மேற்பட்ட வீடுகள், கட்டிடங்கள், கல்லறை, நினைவிடங்கள், கோயில்களையும் காவல்துறை அகற்றியிருந்தது. ஆனால் தொடர்ந்து வந்த பல்துறை அரசு அதிகாரிகளின் அக்கறை இன்மையால் மீண்டும் ஆக்கிரமிப்புகள் ஏற்பட்டுள்ளது.
எந்த ஒரு நீர் புறம்போக்கு ஆக்கிரமிப்பும் அதிகாரிகள் துணை இன்றி நிகழ்வதில்லை. குறிப்பாக ஆற்றுக்குள் வீடு கட்ட அனுமதி கொடுக்கும் உள்ளாட்சி, மின் இணைப்பு கொடுக்கும் மின்வாரியம், பட்டா வழங்கும் வருவாய்த்துறை, அதைக் கண்காணிக்காமல் அலட்சியப்படுத்தும் பொதுப் பணித்துறை என்று பல்வேறு அதிகாரிகளும் ஆக்கிரமிப்புகள் உருவாக நேரடியாகவோ, மறைமுகமாகவோ காரணமாக இருக்கிறார்கள்.
அதேநேரத்தில் பொதுமக்களும் தங்கள் பொறுப்பை உணராமல் தொடர்ந்து செயல்படுகிறார்கள். தாமிரபரணி கரையோர பகுதியை திறந்தவெளி கழிப்பிடமாக்க கூடாது என்று அரசுத்துறைகள் எச்சரிக்கை செய்தும், அதை மீறி ஆற்றங்கரையை திறந்தவெளி கழிப்பிடமாக்கும் அவலம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. திருநெல்வேலியில் வண்ணார்பேட்டை, சிந்துபூந்துறை, கொக்கிரகுளம், கைலாசபுரம் உள்ளிட்ட ஆற்றங்கரை பகுதிகளில் படித்துறைகளில் பொதுமக்கள் குளிக்கும் பகுதிகளையொட்டி ஆற்றங்கரைகளை திறந்தவெளி கழிப்பிடமாக்கியிருப்பதால் துர்நாற்றம் வீசுகிறது. இத்தனைக்கும் இப்பகுதிகளில் மாவட்ட, மாநகராட்சி நிர்வாகங்கள் சார்பில் எச்சரிக்கை அறிவிப்பு பதாகைகளும் வைக்கப்பட்டிருக்கின்றன.
இந்நிலையில், கடந்த 17, 18-ம் தேதிகளில் பெய்த அதிகனமழையால் தாமிரபரணியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கரையோர குடியிருப்புகளை சூழ்ந்தது. பாதிக்கப்பட்டவர்கள் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர். 3 நாட்களுக்குப் பின் மீண்டும் அவர்கள் தங்கள் வீடுகளுக்கு திரும்பியிருக்கிறார்கள். வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் ஒருபுறம் இருக்க, தாமிரபரணி தனது எல்லையை தானே வகுத்துக் கொண்டாள். அவள்போட்ட நீர் கோட்டை பின்பற்றியாவது எல்லை வகுத்து மற்றவர்களை வெளியேற்றுங்கள். அடுத்து வெள்ளம் வரும் ழுது இது போன்ற பெரிய அசம்பாவிதங்கள் தவிர்க்கப்படும் என்ற கருத்து சமூக வலைதளங்களில் தன்னார்வலர்களால் பரப்பப்பட்டது.
இது குறித்து தாமிரபரணி பாதுகாப்பு இயக்க பொதுசெயலர் ஐகோ கூறியது: ''அகன்று விரிந்து ஓடிய தாமிரபரணியின் கள எல்லை பழைய வரைபடம் வருவாய்த் துறையிடம் இல்லை. ஆனால் சேட்டிலைட் மூலம், தொடர்ந்து பல்லாண்டுகள் தாமிரபரணி ஓடிய தடத்தை அறிய முடியும். அதை அறுதியிட்டு அதற்குள் இருக்கும் ஆக்கிரமிப்பு அமைப்புகளை அகற்றி, புதிய வரைபடம் தயாரித்து, நிரந்தரமாக தாமிரபரணி எல்லையை பாதுகாக்க வேண்டும்.
செங்கல் சூளை, கட்டுமானங்கள் உள்ளிட்ட ஆக்கிரமிப்புகளை அகற்றிவிட்டு உடனடியாக வருவாய்த் துறை தயாரிக்க வேண்டியது தாமிரபரணியின் எல்லை வரைபடம் தான். ஆற்றை அளந்து போடு, ஆக்கிரமிப்பை அழித்துப் போடு என்பதுதான் இந்த புதிய ஆண்டில் எங்களது இயக்கத்தின் பலமான ஒற்றைக் கோரிக்கை. மற்றபடி கடந்த காலங்களில் உறுதி அளித்ததுபோல், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி நிர்வாகங்கள் ஆற்றில் கழிவு கலப்பதை இந்த ஆண்டு இறுதிக்குள்ளாவது முற்றிலும் தடை செய்ய வேண்டும்.
ஆற்றங்கரையை திறந்தவெளி கழிப்பிடமாக்குவோரை, ரசாயன பொருட்களை பயன்படுத்தி குளிப்பவர்கள், துவைப்பவர்களுக்கு அபராதம் விதித்து கட்டுப்படுத்த வேண்டும். அதற்கான அதிகாரம், மாநகராட்சி, சுகாதாரத்துறை, காவல்துறை போன்றவற்றுக்கு இருக்கிறது. உரிய சட்ட விதிகளை பயன்படுத்தி தாமிரபரணி தூய்மையை நெடுங்காலம் பேண வேண்டும்.
வண்ணார்பேட்டை அருகே தாமிரபரணி ஆற்றில் மாநகராட்சியே பாதாள சாக்கடை கழிவை கலப்பதை தடுக்க வேண்டும் என்று மாநகராட்சி அதிகாரிகளிடம் முறையிட உள்ளோம். மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காவிட்டால் பொதுப்பணித் துறை கண்காணிப்பு பொறியாளரை சந்தித்து மாநகராட்சி மீது வழக்கு தொடுக்க வலியுறுத்தப்படும். அவரும் நடவடிக்கை எடுக்காவிட்டால் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் குற்றவியல் சட்டப்பிரிவின்கீழ் மாநகராட்சி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க புகார் அளிக்க திடமிட்டுள்ளோம்'' என்று தெரிவித்தார்.