ஸ்ரீவில்லிபுத்தூர்: நாட்டில் உள்ள ரயில் பாதைகளிலேயே மிகவும் குறைவான வேகத்தில் (30 கி.மீ.) ரயில் இயக்கப்படும் செங்கோட்டை - புனலூர் அகல ரயில் பாதையில் கூடுதல் பெட்டிகளுடன் அதிக வேகத்தில் ரயில்களை இயக்குவதற்காக, ரயில்வே துறையின் ஆராய்ச்சி வடிவமைப்பு மற்றும் தர நிலைகள் அமைப்பின் பொறியாளர்கள் ஜனவரியில் ஆய்வு செய்ய உள்ளனர். தமிழகம், கேரளம் ஆகிய இரு மாநிலங்களுக்கு இடையே கோயம்புத்தூர் - பாலக்காடு, செங்கோட்டை - புனலூர், நாகர்கோவில் - திருவனந்தபுரம் ரயில் வழித்தடங்கள் உள்ளன. கோயம்புத்தூர் - பாலக்காடு, நாகர்கோவில் - திருவனந்தபுரம் வழித்தடத்தில் அதிக அளவில் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
ஆனால், செங்கோட்டை - புனலூர் வழித்தடத்தில் சென்னை - கொல்லம், மதுரை - குருவாயூர், பாலருவி எக்ஸ்பிரஸ் ஆகிய 3 ரயில்கள் தினமும், எர்ணாகுளம் - வேளாங்கண்ணி வாரம் இரு முறையும் இயக்கப்படுகின்றன. தென்னிந்தியாவில் இயற்கை எழில் மிகுந்த மலை ரயில் பாதைகளில் செங்கோட்டை - புனலூர் ரயில் பாதை முக்கியமானதாகும். 49 கி.மீ. தூரம் உள்ள இந்த ரயில் பாதையில் 6 குகைகள், 50-க்கும் மேற்பட்ட வளைவுகள் உள்ளன. இவ்வழியாக செல்லும்போது மலைச்சரிவுகள், பள்ளத்தாக்குகள் என கண்களுக்கு இனிமையான அழகான இயற்கை காட்சிகளை ரசிக்க முடியும். கழுத்துருட்டி 13 கண் பாலம் உட்பட சிறிய மற்றும் பெரிய அளவிலான 200 பாலங்கள் இவ்வழித்தடத்தில் உள்ளன.
1902-ம் ஆண்டு பயன்பாட்டுக்கு வந்த இந்த ரயில் பாதையில் முதலில் சரக்கு ரயில்கள் மட்டுமே இயக்கப்பட்டன. அப்போது பிரச்சினை ஏதும் இல்லை. ஆனால், 1904-ம் ஆண்டு பயணிகள் ரயில் இயக்குவதற்காக சோதனை செய்தபோது, பாதை அதிக வளைவுகள் கொண்டதாகவும், ஏற்ற இறக்கமாகவும் இருந்ததால் அதிக வேகத்தில் சென்றால் ரயிலை நிறுத்துவதில் சிரமம் ஏற்பட்டது.
இதனால் ரயிலின் முன்னும், பின்னும் இரு இன்ஜின்களை இணைத்து, 14 பெட்டிகளுடன் மணிக்கு 30 கிலோ மீட்டர் வேகத்துக்குள் ரயிலை இயக்க ஒப்புதல் வழங்கப்பட்டது. ரயிலின் பின்னால் உள்ள இன்ஜின் மேடான பகுதிகளில் செல்லும் ரயிலின் வேகத்தை அதிகரிக்கவும், தாழ்வான பகுதிகளில் செல்லும்போது வேகத்தை குறைக்கும் பணியிலும் ஈடுபடுத்தப்படுகிறது. இவ்வழித்தடத்தில் இயக்கப்படும் அனைத்து ரயில்களும் 2 இன்ஜின்களுடன் சேர்த்து 14 பெட்டிகளுடன், 30 கி.மீ. வேகத்தில் இயக்கப்படுகின்றன.
குறிப்பாக அகல ரயில் பாதை பணிகள் முடிந்து 2018-ம் ஆண்டு ரயில் சேவை தொடங்கப்பட்ட பின்னரும் பழைய முறைப்படியே 14 பெட்டிகளுடன் 30 கி.மீ. வேகத்தில் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. அம்ரித் பாரத் ஸ்டேஷன் திட்டத்தில் மதுரை - கொல்லம் ரயில் வழித்தடத்தில் விருதுநகர், ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், தென்காசி, புனலூர் ஆகிய ரயில் நிலையங்களை மேம்படுத்தும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.
மேலும், பல இடங்களில் தண்டவாள வளைவுகள் நேர் செய்யப்பட்டு விட்டன. ஏற்ற, இறக்கமாக இருந்த தண்டவாளங்களும் சரி செய்யப்பட்டு விட்டன. இவ்வழித்தடத்தில் பகவதிபுரம் - எடமான் இடையே மின்மயமாக்கல் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளன. இந்நிலையில் செங்கோட்டை - புனலூர் இடையே 22 பெட்டிகளுடன் அதிக வேகத்தில் ரயிலை இயக்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு செய்வதற்காக ரயில்வே துறையின் ஆராய்ச்சி வடிவமைப்பு மற்றும் தரநிலைகள் அமைப்பு சார்பில் ஜன.
4 முதல் 14-ம் தேதி வரை ஆய்வு நடத்தப்பட உள்ளது. இதற்காக லக்னோவில் உள்ள ஆராய்ச்சி வடிவமைப்பு மற்றும் தர நிலைகள் அமைப்பின் தலைமை அலுவலகத்தில் இருந்து பொறியாளர்கள் வர உள்ளனர். இந்த ஆய்வுக்குப் பின்பு செங்கோட்டை - புனலூர் ரயில் பாதையில், அதிக வேகத்தில் கூடுதல் ரயில்கள் இயக்க வாய்ப்புள்ளது. இதனால் மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி மாவட்டங்களை சேர்ந்த ரயில் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.