அண்ணாநகரில் வங்கி அதிகாரிகள் போல் பேசி வாடிக்கையாளர் பணம் ரூ.90 ஆயிரத்தை மோசடி நபர்கள் சுருட்டியதை அறிந்த பெண் மாரடைப்பால் மரணமடைந்தார்.
மணப்பாறை தாசில்தாராக இருப்பவர் சேகர். இவரது தந்தை ராஜேந்திரன்(75) சென்னை அண்ணாநகர் 4-வது தெருவில் வசிக்கிறார். ஓய்வுப்பெற்ற கருவூல அதிகாரி. இவரது மனைவி ஜெயலட்சுமி(70). இருவரும் சென்னையில் வசிக்கின்றனர்.
ஜெயலட்சுமிக்கு இந்தியன் வங்கியில் கணக்கு உண்டு. கடந்த வெள்ளிக்கிழமை ஜெயலட்சுமிக்கு செல்போனிலிருந்து அழைப்பு ஒன்று வந்துள்ளது. அதில் பேசிய மர்ம நபர் ஒருவர் வங்கியிலிருந்து பேசுவதாக கூறியுள்ளார்.
ஜெயலட்சுமியின் ஏடிஎம் கார்டு காலாவதியாகி விட்டதாகவும், புதிய ஏடிஎம் கார்டு தர உள்ளதாகவும் ஏடிஎம் கார்டில் உள்ள 16 இலக்க எண்ணை சொல்லும்படி கேட்டுள்ளார். ஜெயலட்சுமியும் வங்கி அதிகாரிதான் பேசுகிறார் என்று நினைத்து 16 இலக்க எண்ணை கூறியுள்ளார்.
பின்னர் ஒன் டைம் பாஸ்வர்டு உங்கள் செல்போனுக்கு வரும் அதை சொல்லுங்கள் என்று அவர் கூறியுள்ளார். இதையடுத்து ஜெயலட்சுமியின் செல்போன் எண்ணுக்கு வந்த ஒன் டைம் பாஸ்வர்டை(ஓடிபி) ஜெயலட்சுமி கூறியுள்ளார். இதையடுத்து நாளை வங்கியில் ஏடிஎம் கார்டை வாங்கிக்கொள்ளுங்கள் என்று கூறி தொடர்பை துண்டித்துள்ளார்.
உடனடியாக சிறிது நேரத்தில் ஜெயலட்சுமியின் வங்கிக் கணக்கிலிருந்து ரூ.90 ஆயிரத்தை எடுத்துவிட்டனர். இதை அறியாத ஜெயலட்சுமி மறுநாள் வங்கிக்கு சென்றுள்ளார். அப்போது வங்கியில் ஜெயலட்சுமியின் பணம் 90 ஆயிரத்தை மர்ம நபர்கள் எடுத்த விபரம் தெரியவந்துள்ளது.
வங்கி அதிகாரிகளிடம் இது குறித்து கேட்டபோது நீங்கள் போன் நம்பருக்கு உங்கள் ஏடிஎம் அட்டை எண்ணை கூறினீர்களா? என்று கேட்டுள்ளனர். ஆமாம் என்று கூறி விபரங்களை ஜெயலட்சுமி கூறியுள்ளார். இதைக்கேட்ட வங்கி அதிகாரிகள் உங்கள் அக்கவுண்டிலிருந்து 90 ஆயிரம் ரூபாயை மர்ம நபர்கள் எடுத்துவிட்டனர் என்று கூறியுள்ளார்.
இதைக்கேட்டு அதிர்ச்சியில் நெஞ்சைப்பிடித்துக்கொண்டு ஜெயலட்சுமி சாய்ந்துள்ளார். மாரடைப்பு ஏற்பட்ட அவரை உடனடியாக அவரை அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதில் ஒரு நாள் தீவிர சிகிச்சைக்கு பின்னர் பலனின்றி ஜெயலட்சுமி மரணமடைந்தார்.
இது குறித்து கணவர் ராஜேந்திரன் அளித்த புகாரின் பேரில் திருமங்கலம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீஸார் விசாரணையில் மர்ம நபர்கள் உத்தரகாண்ட் மாநிலத்திலிருந்து ஜெயலட்சுமிக்கு போன் செய்து அவரது அக்கவுண்டிலிருந்த பணத்தை எடுத்துள்ளது தெரியவந்துள்ளது.