தினக்கூலி முறையை கைவிட்டு குறைந்தபட்ச மாத ஊதியமாக 21,000 வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு டெங்கு கொசுப்புழு ஒழிப்பு முன்களப் பணியாளர்கள் சங்கம் சார்பில், கவன ஈர்ப்பு உண்ணாவிரதப் போராட்டம் சென்னையில் நேற்று நட ந்தது. | படம்: எஸ்.சத்தியசீலன் | 
தமிழகம்

பணி பாதுகாப்பு, மாத ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கொசுப்புழு ஒழிப்பு ஊழியர்கள் உண்ணாவிரதம்

செய்திப்பிரிவு

சென்னை: பணி பாதுகாப்பு, மாத ஊதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெங்கு கொசுப்புழு பணியாளர்கள் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில் நேற்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு டெங்கு கொசுப் புழு ஒழிப்பு முன்களப் பணியாளர் சங்கத்தின் தலைவர் கே.ஜெயவேல் தலைமையில் நடந்த போராட்டத்தில் சமூக சமத்துவத்திற்கான டாக்டர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜி.ஆர்.ரவீந்திரநாத் மற்றும் மருத்துவத் துறை சார்ந்த சங்கங்களின் நிர்வாகிகள், டெங்கு கொசுப்புழு பணியாளர்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உண்ணாவிரதத்தில் பங்கேற்றனர்.

இதுதொடர்பாக கே.ஜெயவேல் கூறியதாவது: தமிழகத்தில் 38,000-க்கும் மேற்பட்ட டெங்கு கொசுப்புழு ஒழிப்பு பணியாளர்கள் தினக்கூலி அடிப்படையில் பணியாற்றி வருகின்றனர். அவர்களுக்கு ஊதியம் உள்ளாட்சி அமைப்புகளின் கீழ் வழங்கப்படுகிறது. ஆனால், மருத்துவத் துறையின் கீழ் பணிசெய்ய வைக்கப்படுகின்றனர். டெங்குவை பரப்பும் ஏடிஸ் எஜிப்டி கொசுவை கட்டுப்படுத்துவதில் மகத்தான சேவையை அவர்கள் செய்து வருகின்றனர். அவர்களுக்கு ரூ.250 முதல் ரூ.450 வரை தினக்கூலி வழங்கப்படுகிறது. இந்த தினக் கூலி மாவட்டத்துக்கு மாவட்டம் வேறுபடுகிறது.

ஊதியமும் முறையாக வழங்கப்படுவதில்லை. அவ்வப்போது அவர்கள் பணி நீக்கமும் செய்யப்படுகின்றனர். அதனால், அவர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்கிட வேண்டும். பணி நீக்கம் செய்யக்கூடாது. தினக்கூலி முறையை ரத்து செய்ய வேண்டும். மாத ஊதியம் வழங்கிட வேண்டும். குறைந்தபட்ச ஊதியமாக மாதம் தோறும் ரூ.21 ஆயிரம் வழங்க வேண்டும்.

சம வேலைக்கு, சம ஊதியம்வழங்கிட வேண்டும். பணியாளர்கள் அனைவரையும் மருத்துவத்துறையின் கீழ் கொண்டுவந்து, மருத்துவத் துறை பணியாளர்களாக மாற்றி, மருத்துவத்துறையே ஊதியம் வழங்கிட வேண்டும். கரோனா ஊக்கத்தொகை வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறுகிறது. இவ்வாறு அவர் தெரிவிதார்.

SCROLL FOR NEXT