சென்னை: ஆங்கிலப் புத்தாண்டையொட்டி கோயில்கள், தேவாலயங்களில் நேற்றுசிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. ஆங்கிலப் புத்தாண்டையொட்டி, சிறு கோயில்களில் நேற்று நள்ளிரவுமுதலே சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. இதில் பொதுமக்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். முன்னதாக, பூங்காநகர் ராசப்பா தெருவில் கந்தகோட்டம் முருகன் கோயில் தொடங்கப்பட்ட நாளான நேற்று (டிச.31) மாலை 108 சங்காபிஷேகம் நடைபெற்றதைத் தொடர்ந்து, தங்க மயில் வாகனத்தில் சுவாமி ஊர்வலம் நடைபெற்றது.
முக்கிய கோயில்களில் அதிகாலை 4 மணியளவில் நடைதிறக்கப்பட்டது. குறிப்பாக, வடபழனி ஆண்டவர் கோயிலில் அதிகாலை 4 மணிக்கு, திருப்பள்ளி எழுச்சியும், அதைத் தொடர்ந்து சிறப்பு அபிஷேக, அலங்காரமும் நடைபெற்றது. பின், தங்க நாணய கவச அலங்காரத்தில் மூலவர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து, சந்தனகாப்பு அலங்காரம், பகல் 12 மணிக்கு தங்க கவச அலங்காரமும், மாலையில் ராஜஅலங்காரமும் நடக்கிறது.
புத்தாண்டு தினத்தில் பக்தர்களின் வருகை அதிகம் இருக்கும் என்பதால் கோயில் நிர்வாகத்தின் சார்பில் கரோனா விதிமுறைகள் முழுமையாக கடைப்பிடிக்கப்பட்டு, நடைமுறைபடுத்தப்பட்டது. மேலும், பக்தர்களுக்கு பிரசாதமாக வெண்பொங்கல், சர்க்கரை பொங்கல், புளியோதரை உள்ளிட்டவை நாள் முழுவதும் வழங்கப்படுகின்றன. கோயிலுக்கு வெளியே சிறப்பு தரிசன டிக்கெட் கவுன்ட்டர்களும் அமைக்கப்பட்டுள்ளன.
பெசன்ட் நகரில் அமைந்துள்ள அஷ்டலட்சுமி கோயிலில், அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு, ஆதிலட்சுமி, தான்யலட்சுமி, தைரிய லட்சுமி ஆகிய சந்நிதிகளில் அர்ச்சனை செய்ய சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அஷ்டலட்சுமிகளையும் தரிசித்தபின், மற்ற சந்நிதிகளை பக்தர்கள் தரிசித்து சென்றனர்.
இதேபோல், மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில், தியாகராய நகரில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தானம், பத்மாவதி தாயார் சந்நிதானம், புரசைவாக்கம் கங்காதீஸ்வரர் கோயில், சீனிவாசப் பெருமாள் கோயில், கோயம்பேட்டில் உள்ள குறுங்காலீஸ்வரர் கோயில், பாடி திருவல்லீஸ்வரர் சிவன் கோயில், புறநகர் பகுதிகளில் உள்ளதிருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோயில், திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோயில், மாங்காடு காமாட்சியம்மன் கோயில் உட்பட அனைத்து கோயில்களிலும் புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடத்தப்பட்டன. சிறப்பு மலர் அலங்காரங்களும் செய்யப்பட்டிருந்தன.
அனைத்து கோயில்களிலும் அதிகாலை 4 மணி முதல் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமிதரிசனம் செய்தனர். பல்வேறு கோயில்களில் பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன. கொடையாளர்கள் சார்பில் அன்னதானமும் வழங்கப்பட்டது. இரவு 10 மணி வரை பக்தர்கள், தடையில்லா தரிசனத்துக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தேவாயலங்களில் திருப்பலி: கிறிஸ்தவ தேவாலயங்களில் 31-ம் தேதி நள்ளிரவு சிறப்பு திருப்பலியும், சிறப்பு ஆராதனைகளும் நடைபெற்றன. சென்னை சாந்தோம் பேராலயத்தில் நள்ளிரவு 11.30 மணி அளவில் சிறப்பு திருப்பலியும், புத்தாண்டுஆராதனையும் நடந்தன. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர்.
இதேபோல், பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி திருத்தலம், மயிலாப்பூர் பிரகாச மாதா ஆலயம் (லஸ் சர்ச்), ராயப்பேட்டை காணிக்கை அன்னை ஆலயம், எழும்பூர் திரு இருதய ஆண்டவர் திருத்தலம், புதுப்பேட்டை புனித அந்தோணியார் ஆலயம், பரங்கிமலை புனித தோமையார் ஆலயம், பாரிமுனைதூய மரியன்னை இணை பேராலயம், நுங்கம்பாக்கம் செயின்ட் தெரசாஆலயம், பெரம்பூர் லூர்து அன்னை திருத்தலம் உள்ளிட்ட சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ளஅனைத்து தேவாலயங்களிலும் நேற்று சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.
இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர். அவர்கள் இனிப்புகளை பகிர்ந்து புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டனர்.
சுற்றுலா தலங்களில் குவிந்த பொதுமக்கள்: சென்னையின் முக்கிய சுற்றுலா தலங்களில் நேற்று மாலை முதலே பொதுமக்கள் குவியத் தொடங்கினர். குறிப்பாக, மெரினா, பெசன்ட் நகர், திருவான்மியூர் உள்ளிட்ட கடற்கரைகளில் குடும்பத்துடன் வருகை தந்த பொதுமக்கள், கடற்கரையில் நேரத்தை செலவழித்தனர்.
உள்ளூர் மட்டுமின்றி, வெளியூர்களில் இருந்தும் பொதுமக்கள் நேற்று அதிகளவில் வருகை தந்தனர். அவர்கள் நேற்று மாலை முதலே புத்தாண்டை வரவேற்க தயாராகி கொண்டிருந்தனர். நேற்றும் விடுமுறை என்பதால் கத்திப்பாரா நகர்ப்புற சதுக்கம், முக்கிய பூங்காங்கள் போன்ற இடங்களிலும் பொதுமக்கள் அதிக அளவு காணப்பட்டனர்.