திருச்சி: பொங்கல் பண்டிகைக்கு ரேஷன் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்புடன் செங்கரும்பு வழங்க தமிழக அரசு அறிவிப்பு வெளியிட வேண்டும் என கரும்பு பயிரிட்டுள்ள விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகைக்கு தமிழகத்தில் உள்ள ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்புடன் முழு செங்கரும்பு மற்றும் ரூ.1,000 ரொக்கம் ஆகியவை கடந்த ஆண்டுகளில் தமிழக அரசின் சார்பில் வழங்கப்பட்டன.
பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 2 வாரங்களே உள்ள நிலையில், இந்த ஆண்டு பொங்கல் சிறப்பு தொகுப்பு தொடர்பாக தமிழக அரசு அறிவிப்பு எதையும் இதுவரை வெளியிடவில்லை. இந்நிலையில், பொங்கல் பண்டிகைக்காக மட்டுமே செங்கரும்புகளை சாகுபடி செய்துள்ள விவசாயிகள், இந்த ஆண்டுரேஷனில் வழங்கும் பொங்கல் பரிசுத் தொகுப்புடன் செங்கரும்பையும் வழங்க, அரசு தங்களது கரும்புகளை கொள்முதல் செய்தால் மட்டுமே விவசாயிகளுக்கு குறைந்தஅளவாவது லாபம் கிடைக்கும் என்கின்றனர்.
இது குறித்து, திருச்சி திருவளர்ச்சோலையைச் சேர்ந்த விவசாயி ஓ.பன்னீர்செல்வம் `இந்து தமிழ்' நாளிதழிடம் கூறியது: தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலம் பொது மக்களுக்கு பொங்கல் பரிசுடன் ஒரு துண்டு கரும்பு வழங்கப்பட்டு வந்தது. அதன் பிறகு முழு கரும்பாக வழங்கினால் கரும்பு விவசாயிகள் பலன் பெறுவார்கள் என விவசாயிகள் வைத்த கோரிக்கையை தொடர்ந்து, பொங்கல் பரிசுடன் முழு செங்கரும்பாக வழங்க அரசு உத்தரவிட்டு, அதன்படி தரமான கரும்புகள் கொள்முதல் செய்யப்பட்டு, பொதுமக்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் கடந்த 2 ஆண்டுகளாக வழங்கப்பட்டன.
இதில், கடந்த ஆண்டில் ஒரு கரும்பு ரூ.31-க்கு கூட்டுறவுத் துறை மூலம் கொள்முதல் செய்யப்பட்டு, அதற்கான தொகை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டது. இதனால் செங்கரும்பு சாகுபடி செய்திருந்த விவசாயிகளுக்கு, இடைத்தரகர் இன்றி நல்ல விலை கிடைத்தது. ஆனால், இந்த ஆண்டு இதுவரை பொங்கல் பண்டிகைக்கு ரேஷன் கடைகளில் கரும்பு வழங்குவது தொடர்பாக தமிழக அரசு அறிவிப்பு எதையும் வெளியிடவில்லை. இதனால், ஏக்கருக்கு ரூ.3 லட்சம் வரை செலவு செய்து செங்கரும்பு சாகுபடி செய்துள்ள விவசாயிகள் விரைவில் தமிழக அரசு ரேஷனில் முழு செங்கரும்பு வழங்குவதற்கான அறிவிப்பை வெளியிட வேண்டும் என எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
செங்கரும்பை அரசு கொள்முதல் செய்யவில்லையெனில், வியாபாரிகள் மிக குறைந்த விலைக்கு தான் கரும்பை கொள்முதல் செய்வார்கள். பொங்கல் பண்டிகை முடிந்து விட்டால், இந்த கரும்புக்கு மவுசு கிடையாது. எனவே தமிழக அரசு கடந்த ஆண்டைப் போன்று வெளிப் படையான முறையில் கரும்பை கொள்முதல் செய்வதற்கான அறிவிப்பை வெளியிட வேண்டும் என்றார்.