சுதந்திர போராட்ட தியாகிகளுக்கான ஓய்வூதியம் 9,000 ரூபாயிலிருந்து 10,000 ரூபாயாக உயர்த்தப்படுவதாக சுதந்திர தின விழாவில் முதல்வர் அறிவித்தார்.
68-வது சுதந்திர தினத்தை ஒட்டி சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் தேசியக் கொடியேற்றிய முதல்வர் ஜெயலலிதா உரையாற்றினார்.
அப்போது அவர்: "சுதந்திர போராட்ட வீரர்களை நினைவுகூரும் இந்த வேளையில், சுதந்திர போராட்ட தியாகிகளுக்கான ஓய்வூதியம் 9,000 ரூபாயிலிருந்து 10,000 ரூபாயாகவும், அவர்களின் வாரிசுதாரர்களுக்கு வழங்கப்படும் குடும்ப ஓய்வூதியம் 4,500 ரூபாயிலிருந்து 5,000 ரூபாயாகவும் உயர்த்தப்படும். இதன் மூலம், 1,955 நபர்கள் பயனடைவர்.
இதனால் அரசுக்கு ஆண்டு ஒன்றிற்கு 1 கோடியே 43 லட்சத்து 52 ஆயிரம் ரூபாய் கூடுதல் செலவு ஏற்படும்.
இதுவன்றி, விடுதலைப் போராட்டத்தில் பங்கு கொண்டு நாட்டிற்காக குறிப்பிடத் தக்க வகையில் சிறப்புற பணியாற்றியவர்களின் தியாகத்தை போற்றும் வகையில் அவர்களது வாரிசுதாரர்களுக்கு சிறப்பு ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது.
இதன்படி, வீரபாண்டிய கட்டபொம்மனின் வழித்தோன்றல்கள், மருது சகோதரர்களின் வழித்தோன்றல்கள், முத்துராமலிங்க விஜய ரகுநாத சேதுபதியின் வழித்தோன்றல்கள், வ.உ. சிதம்பரனாரின் பேரன் ஆகியோருக்கு மாதம் 2,000 ரூபாய் சிறப்பு ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த சிறப்பு ஓய்வூதியம் இனி 4,500 ரூபாயாக உயர்த்தப்படும். இதன் மூலம் 195 நபர்கள் பயனடைவர். இதனால் அரசுக்கு ஆண்டு ஒன்றுக்கு 58 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் கூடுதல் செலவு ஏற்படும்" என அறிவித்தார்.