சென்னை: கடந்த ஆண்டு டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட வருடாந்திர தேர்வு அட்டவணையில் இடம்பெற்ற அறிவிப்புகளில் 8 அறிவிப்புகள் குறித்து எவ்வித தகவலும் வெளியிடப்படாததால் தேர்வர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.
தமிழ்நாட்டில் அரசின் பல்வேறு துறைகளுக்கு தேவைப்படு்ம் ஊழியர்களும், அலுவலர்களும் டிஎன்பிஎஸ்சி எனப்படும் தமிழ்நாடுஅரசு பணியாளர் தேர்வாணையம் வாயிலாக தேர்வுசெய்யப்படுகிறார்கள். இதற்காக குருப்-1, குருப்-2, குருப்-4 என பல்வேறு நிலைகளில் போட்டித்தேர்வுகளை நடத்தி பணியாளர்களை தேர்வு செய்கிறது டிஎன்பிஎஸ்சி. ஓராண்டில் எந்தெந்த அரசு பணியிடங்களுக்கு என்னென்ன போட்டித் தேர்வுகள் நடத்தப்படும், அவற்றுக்கான அறிவிப்புகள் எப்போது வெளியாகும், தேர்வுகள் எப்போது நடத்தப்பட்டு முடிவுகள் வெளியிடப்படும் என்பன உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய வருடாந்திர தேர்வு கால அட்டவணையை டிஎன்பிஎஸ்சி ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது.
கடந்த ஆண்டு வெளியான டிஎன்பிஎஸ்சி தேர்வு அட்டவணையில் பல்வேறு தேர்வுகளுக்கான அறிவிப்புகள் இடம்பெற்றிருந்தன. அவற்றில் 8 தேர்வு அறிவிப்புகள் இன்னும் வெளியிடப்படவில்லை. அடுத்த ஆண்டுக்கான வருடாந்திர தேர்வு அட்டவணையில் கடந்த வாரம் வெளியான நிலையில், முந்தைய ஆண்டு நிலுவை அறிவிப்புகள் தொடர்பாக எவ்வித தகவலையும் டிஎன்பிஎஸ்சி வெளியிடவில்லை. இதில் உதவி தொழிலாளர் ஆணையர், உதவி சுற்றுலா அலுவலர், அரசு போக்குவரத்துக் கழக உதவி மேலாளர் (சட்டம்), ஊரக வளர்ச்சித் துறை சாலை ஆய்வாளர், மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர் ஆகிய தேர்வுகளுக்கான அறிவிப்புகள் குறிப்பிடத்தக்கவை. பட்டப்படிப்புடன் தொழில்நுட்பக் கல்வித்தகுதி கொண்ட பணிகளுக்கான தேர்வு (400 காலியிடம்) உள்ளிட்ட தேர்வுகளும் அதில் அடங்கும்.
கடந்த ஆண்டு அட்டவணையில் இடம்பெற்றிருந்த குருப்-4 தேர்வுஅடுத்த ஆண்டு தேர்வு அட்டவணையில் இடம்பெற்றுள்ளது. ஆனால், அதுபோன்று மேற்குறிப்பிட்ட 8 தேர்வுகளுக்கான அறிவிப்புகள் சேர்க்கப்படவில்லை. அந்த தேர்வுகளுக்கான அறிவிப்புகள் விரைவில் வெளியிடப்படுமா அல்லது அத்தேர்வுகளுக்கான அறிவிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளனவா என்பது குறித்த எவ்வித அறிவிப்பையும் வெளியிடாதாதல் டிஎன்பிஎஸ்சி மீது தேர்வர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். கடந்த ஆண்டு தேர்வு காலஅட்டவணையில் இடம்பெற்று நிலுவையில் உள்ள தேர்வுகளுக்கான அறிவிப்புகள் குறித்து டிஎன்பிஎஸ்சி உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்று தேர்வர்கள் எதிர்பார்க்கிறார்கள்.