தமிழகம்

லஞ்ச ஒழிப்பு பிரிவு புகாருக்கு சம்மன் அனுப்பியும் ஆஜராகாத மதுரை அமலாக்கத் துறை அதிகாரிகள்

என்.சன்னாசி

மதுரை: லஞ்ச ஒழிப்புத் துறையினர் அளித்த புகாரையொட்டி சம்மன் அனுப்பியும் மதுரை அமலாக்கத் துறை அதிகாரிகள் தல்லாகுளம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகவில்லை. மீண்டும் அந்த அதிகாரிகளுக்கு தல்லாகுளம் போலீஸார் சம்மன் அனுப்ப திட்டமிட்டுள்ளனர்.

மதுரை தபால் தந்தி நகரிலுள்ள துணை மண்டல அமலாக்கத் துறை அலுவலகத்தில் விசாரணை அதிகாரியாக பணிபுரிந்தவர் அங்கித் திவாரி. சில தினத்துக்கு முன்பு திண்டுக்கல்லைச் சேர்ந்த அரசு மருத்துவர் சுரேஷ் பாபுவை அணுகியுள்ளார். அவர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கை மீண்டும் விசாரிக்காமல் தவிர்க்க, அங்கித் திவாரி ரூ.20 லட்சம் லஞ்சம் வாங்கியபோது, திண்டுக்கல் லஞ்ச ஒழிப்பு போலீஸார் அவரை கைது செய்தனர்.

இதைத் தொடர்ந்து மதுரையிலுள்ள அமலாக்கத் துறை அலுவலகத்திற்கு சோதனைக்குச் சென்ற மதுரை லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாரை அங்கு பணியில் இருந்த 15-க்கும் மேற்பட்ட அமலாக்கத் துறை அதிகாரிகள் பணி செய்யவிடாமல் தடுத்துள்ளனர். ஒரு கட்டத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் திவாரி அலுவலகத்திற்குள் புகுந்து சோதனையிட்டு, சில ஆவணங்களை விசாரணைக்காக கைப்பற்றி சென்றனர். லஞ்ச ஒழிப்புத் துறை சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து, அத்து மீறி நுழைந்தவர்கள் நடவடிக்கை எடுக்கக் கோரி மதுரை அமலாக்கத் துறை உதவி இயக்குநர் பிரிஜிஸ்ட் பெனிவால் தமிழ்நாடு டிஜிபிக்கு புகார் கடிதம் அனுப்பினார்.

இந்நிலையில், மதுரை லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி சத்யசீலன், தங்களை பணி செய்யவிடாமல் தடுத்த அமலாக்கத் துறையினர் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி புகார் ஒன்றை தல்லாகுளம் காவல் நிலையத்தில் கொடுத்தார். இப்புகாரின் பேரில், டிச.1-ம் தேதி பணியில் இருந்த 15-க்கும் மேற்பட்ட அமலாக்கத் துறையினர் (பெயர் இன்றி) மீது தல்லாகுளம் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

மேலும், இது தொடர்பாக அமலாக்கத் துறை உதவி இயக்குநர் பிரிஜிஷ்ட் பெனிவால் உட்பட அத்துறையினர் சிலருக்கு சம்மன் அளிக்க கடந்த வாரம் மதுரை அமலாக்கத் துறை அலுவலகத்திற்கு போலீஸார் சென்றபோது, அவர்கள் வாங்க மறுத்ததால் பெனிவால் உள்ளிட்டோர் நேற்று காலை சுமார் 11 மணிக்கு நேரில் ஆஜராக வேண்டும் என மாநகர போலீஸ் சார்பில் சம்மன் அனுப்பினர். தல்லாகுளம் காவல் உதவி ஆணையர் சம்பத் தலைமையில் போலீஸ் குழு விசாரணைக்கென தயாராக இருந்தும், அமாலக்கத் துறையினர் யாரும் வரவில்லை. காவல் நிலையத்தில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

பத்திரிகை, தொலைக்காட்சி செய்தியாளர்களும் காவல் நிலையத்தில் குவிந்தனர். போலீஸ் தரப்பில் கேட்டபோது, "லஞ்ச ஒழிப்புத் துறை கொடுத்த புகாரின் பேரில், வழக்கு பதிவு செய்தாலும், நேரில் விசாரிக்க, அமலாக்கத் துறையினருக்கு நேரில் சம்மன் கொடுக்க முயன்றும், அனுப்பியும் வரவில்லை. அதிகாரிகளின் ஆலோசனை பெற்று, மீண்டும் சம்மன் அனுப்புவோம். வராத பட்சத்தில் அடுத்த கட்ட நட வடிக்கை எடுக்கப்படும்" என்றனர்.

SCROLL FOR NEXT