தமிழகம்

அதிமுக பொதுக்குழு இன்று வானகரத்தில் கூடுகிறது: தேர்தல், கூட்டணி தொடர்பாக முக்கிய முடிவு எடுக்க வாய்ப்பு

செய்திப்பிரிவு

சென்னை: அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் இன்று கூடுகிறது. இக்கூட்டத்தில் மக்களவை தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாகவும், கூட்டணி தொடர்பாகவும் முக்கிய முடிவு எடுக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.

அதிமுகவில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் வரை பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கொண்ட இரட்டை தலைமைசெயல்பட்டு வந்தது. கட்சியில் ஒற்றைத் தலைமை சர்ச்சை எழுந்த நிலையில், இருதரப்பினர் இடையே நீண்ட சட்டப் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இன்னும் சட்டப்போராட்டம் ஓய்ந்தபாடில்லை. இதற்கிடையில் கடந்த ஆண்டு ஜூலை 11-ம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின்இடைக்கால பொதுச்செயலாளராக பழனிசாமி தேர்தெடுக்கப்பட்டார். ஓ.பன்னீர்செல்வம் மற்றும்அவரது ஆதரவாளர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். நீண்ட சட்டப் போராட்டங்களுக்கு பிறகு,தேர்தல் மூலம் கட்சியின் பொதுச்செயலாளராக பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள், சட்ட விதிகளின்படி ஆண்டுக்கு ஒருமுறை பொதுக்குழு கூட்டமும், 2 முறை செயற்குழு கூட்டமும் நடத்த வேண்டும். அதன்படி, கட்சியின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் இன்று காலை காலை 10.30 மணிக்கு சென்னை வானகரத்தில் உள்ள வாரு வெங்கடாசலபதி பேலஸ் மண்டபத்தில், அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் நடைபெறுகிறது.

பழனிசாமி கட்சியின் பொதுச்செயலாளரான பிறகு நடைபெறும் முதல் பொதுக்குழுகூட்டம் என்பதால், முன்னாள் அமைச்சர் பா.பென்ஜமின் தலைமையில் சிறப்பாக வரவேற்பு அளிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. மயிலாட்டம், ஒயிலாட்டம் உள்ளிட்ட கிராமிய இசை நடனங்கள், குதிரை படை, பேண்டு, வாத்தியம், நாசிக் டோல், மகளிரணியினரின் பூரண கும்ப மரியாதை என தீவிர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் சுமார் 2800 பேருக்குஅழைப்பிதழ்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அறுசுவை உணவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இக்கூட்டம் ஜெயலலிதா இருந்தபோது நடத்தியவாறு, 10-க்கும் மேற்பட்ட மூத்த தலைவர்கள் பேச அனுமதிக்கப்பட உள்ளனர். இறுதியாக பொதுச்செயலாளர் பழனிசாமி பேச உள்ளார். இக்கூட்டத்தில், பாஜகவுடனான கூட்டணியை முறித்துக்கொண்ட நிலையில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள மக்களவை தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வது, வேட்பாளர்களை தேர்வு செய்வது,கூட்டணி வியூகம், ஓ.பன்னீர்செல்வம் அணி, டிடிவி தினகரன் அணியில் உள்ள அதிமுகவினரை கட்சியில் சேர்க்கும் நடவடிக்கைகள், வாக்குச்சாவடி அளவில்தொண்டர்கள் எப்படி களப்பணியாற்றுவது உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், இக்கூட்டத்தில் மிக்ஜாம் புயல் மற்றும் சென்னை பெருவெள்ள பாதிப்புகள் மற்றும் தென் மாவட்ட வெள்ள பாதிப்புகளை சரியாக அரசு கையாளவில்லை எனக்கூறியும், அறிவிக்கப்பட்ட வெள்ள நிவாரணம், எண்ணெய் கசிவு நிவாரணம் உயர்த்தி வழங்க வலியுறுத்தியும், சென்னையில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் வெள்ள நிவாரணம் வழங்க வலியுறுத்தியும் ஆளும் திமுக அரசுக்கு எதிராக ஏராளமான தீர்மானங்களை நிறைவேற்ற திட்டமிடப்பட்டுள்ளது.

பொதுச்செயலாளராக பொறுப்பேற்று முதல்முறையாக பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்கும் பழனிசாமிக்கு பாரட்டு தெரிவித்தல், மக்களவை தேர்தல் கூட்டணி குறித்து முடிவெடுக்கும் அதிகாரம் பழனிசாமிக்கு வழங்குவது தொடர்பாகவும், மத்திய அரசுக்கு கோரிக்கைகள் வைத்தும், கட்சியின் உறுப்பினர் எண்ணிக்கையை 2.44 கோடியாக உயர்த்தியதற்காக மாவட்ட செயலாளர்களுக்கு பாராட்டு தெரிவித்தும் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்ற இருப்பதாக கூறப்படுகிறது.

SCROLL FOR NEXT