நாகப்பட்டினம்: வேளாங்கண்ணி பேராலயத்தில்கிறிஸ்துமஸ் பண்டிகையை யொட்டி நேற்று முன்தினம் நள்ளிரவில் நடைபெற்ற சிறப்பு கூட்டுத்திருப்பலியில் பல்லாயிரக்கணக் கானோர் பங்கேற்றனர். நாகை மாவட்டம் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு, நேற்று முன்தினம் நள்ளிரவு சிறப்பு கூட்டுத் திருப்பலி நடைபெற்றது. பேராலய அதிபர் இருதயராஜ் அடிகளார், துணை அதிபரும், பங்குத் தந்தையுமான அற்புதராஜ் அடிகளார் உள்ளிட்ட பாதிரியார்கள், பேராலயத்தின் பிரார்த்தனை மண்டபத்துக்கு வந்தனர். அவர்களை சிறுமிகள் மலர்தூவி வரவேற்றனர்.
பேராலய அதிபர் இருதயராஜ் அடிகளார் தமிழிலும், ஆங்கிலத்திலும் சிறப்பு கூட்டுத் திருப்பலியை தொடங்கி வைத்தார். பின்னர், தேவதை உடையணிந்த சிறுமிகள், குழந்தை யேசு சொரூபத்தை சுமந்து வந்து, இருதயராஜ் அடிகளாரிடம் அளித்தனர். பின்னர், அவர்குழந்தை யேசு சொரூபத்தை புனிதப்படுத்தி, பிரார்த்தனை மண்டபத்தில் கூடியிருந்த அனைவருக்கும் தெரியும் வகையில் காட்டினார். பிறகு, பாதிரியார்களும், பிரார்த்தனையில் பங்கேற்றவர்களும் குடிலில் வைக்கப்பட்டிருந்த குழந்தை யேசு சொரூபத்தை முத்தமிட்டனர்.
தொடர்ந்து, தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு,கொங்கணி ஆகிய மொழிகளில் மன்றாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர், விழாவில் பங்கேற்றவர்கள் ஒருவரையொருவர் கட்டியணைத்து சமாதானம் சொல்லிக் கொண்டனர். விழாவை முன்னிட்டு,பேராலய கோபுரங்கள் மின்விளக்குகளால் அலங்கரிக்கப் பட்டிருந்தன. நேற்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை ஒரு மணிநேரத்துக்கு ஒரு முறை பேராலயம்,கீழ் கோவில், விண்மீன் ஆலயம்ஆகியவற்றில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.