தமிழகம்

மடத்துக்குளம் - ராஜாவூர் கோயிலில் பட்டியல் இன மக்கள் வழிபாடு

செய்திப்பிரிவு

திருப்பூர்: இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான கோயிலில் பட்டியல் இன மக்களின் வழிபாட்டு உரிமை போராட்டம் வெற்றி பெற்றுள்ளதாக, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி தெரிவித்துள்ளது.

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் வட்டம் மைவாடி ஊராட்சி ராஜாவூர் கிராமத்தில், கடந்த 5-ம் தேதி பட்டியல் இன நபர் மீது வன்கொடுமை தாக்குதல் நடைபெற்றது.

பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக தமிழக தீண்டாமை ஒழிப்பு முன்னணி நடத்திய கள ஆய்வில், ராஜாவூர் கிராமத்தில் பட்டியல் இன மக்கள் பொது வீதிகளில் செருப்பு அணிந்து செல்ல முடியாது, அப்பகுதியில் உள்ள தேநீர் கடையில் இரட்டை டம்ளர் முறை மற்றும் தமிழக அரசின் இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான ராஜகாளியம்மன் கோயிலில் பட்டியல் இன மக்களுக்கு வழிபாட்டு உரிமை மறுப்பு உள்ளிட்டவை இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, வன்கொடுமை நடத்தியவர்களை கைது செய்ய வேண்டும், மேலும் பொது இடங்களில் பட்டியல் இன மக்களுக்கு சட்ட உரிமை கிடைக்க நடவடிக்க எடுக்க வேண்டும் என்று, கடந்த 13-ம் தேதி உடுமலை காவல் துணை கண்காணிப்பாளரிடம் கோரிக்கை மனு அளிக்கப் பட்டது. இதே கோரிக்கையை வலியுறுத்தி, கடந்த 18-ம் தேதி திருப்பூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரி மனு அளிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், ராஜாவூர் கிராமத்திலுள்ள கோயிலில் வழிபடவும், பொதுப் பாதையில் செருப்பு அணிந்து நடக்கவும் முடிவு செய்து, அதை உறுதி செய்யும் வகையில் தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்ட செயலாளர் சி.கே.கனகராஜ் தலைமையிலும், மாநில தலைவர் த.செல்லக் கண்னு முன்னிலையிலும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் மற்றும் பொது மக்கள் பேரணியாக பொதுப் பாதையில் செருப்பு அணிந்து சென்றனர். பின்னர், கோயிலுக்குள் சென்று வழிபட்டனர்.

இந்நிகழ்வில், தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்ட பொருளாளர் அ.பஞ்சலிங்கம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தாலுகா செயலாளர் ஆர்.வி. வடிவேல், சிஐடியு நிர்வாகி பன்னீர் செல்வம் மற்றும் திராவிடர் கழகம், விடுதலை சிறுத்தைகள் கட்சி, தந்தை பெரியார் திராவிடர் கழகம், ஆதி தமிழர் சனநாயக பேரவை உட்பட பல்வேறு கட்சி,அமைப்புகளின் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் நிர்வாகிகள் நேற்று கூறும்போது, ‘‘இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான கோயிலுக்குள் சென்று வழிபட்டதன் மூலமாக, பட்டியல் இன மக்களின் வழிபாட்டு உரிமை போராட்டம் வெற்றி பெற்றுள்ளது ’’என்றனர்.

SCROLL FOR NEXT