சென்னை: கனமழையால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் 4 மற்றும் 5-ம் அலகுகளில் இந்த வார இறுதிக்குள் மின்னுற்பத்தி தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த வாரம் பெய்த அதிகன மழையில் தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் தண்ணீர் புகுந்தது. அங்கு நிலக்கரி எடுத்துச் செல்லப்படும் கன்வேயர் பெல்ட்கள், நிலக்கரியை கையாளும் இயந்திரங்கள், மின்னுற்பத்தி செய்யும் இயந்திரங்கள் சேதம் அடைந்தன. இதனால், 1,050 மெகாவாட் திறன் கொண்ட தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் கடந்த 10 நாட்களாக ஒரு யூனிட்கூட மின்சாரம் உற்பத்தி செய்ய முடியவில்லை.
இந்த மின்நிலையத்தில் உள்ள 5 அலகுகளில் முதல் 3 அலகுகளில் உள்ள இயந்திரங்களை பழுதுபார்க்கும் பணி பெரிய சவாலாகஉள்ளது. இதனால், அந்த அலகுகளில் மின்னுற்பத்தி தொடங்க மேலும் சில நாட்கள் ஆகும் என தெரிகிறது. இந்நிலையில், 4 மற்றும் 5-வது அலகுகளில் மின்னுற்பத்தி தொடங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறிப்பாக, கன்வேயர் பெல்ட்கள், நிலக்கரியை கையாளும் இயந்திரங்களை பழுது பார்க்கும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வரப்படுகிறது. எனவே, இந்தவார இறுதிக்குள் இந்த 2 அலகுகளிலும் மின்னுற்பத்தி தொடங்கநடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.