தமிழகம்

மக்களவைத் தேர்தலுக்குள் மேலும் 3 திமுக அமைச்சர்கள் சிறைக்கு செல்வர்: அண்ணாமலை

செய்திப்பிரிவு

கும்பகோணம்: வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்குள் மேலும் 3 திமுக அமைச்சர்கள் சிறைக்கு செல்வார்கள் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் வட்டம் பசுபதி கோவில், அய்யம்பேட்டை பகுதிகளில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை நேற்று என் மண் என் மக்கள் யாத்திரை மேற்கொண்டார்.

அப்போது அவர் பேசியது: தமிழ் மொழி, மண், கலாச்சாரம் மீது பிரதமருக்கு மரியாதை உள்ளது. இந்தியாவில் உள்ள ஏழைகள், பெண்கள், விவசாயிகள், இளைஞர்கள் ஆகியோருக்காகத் தான் இந்த ஆட்சி நடந்து வருகிறது என பிரதமர் கூறியுள்ளார். தமிழகத்தில் மக்களுக்கு உயர் கல்வியை சொல்லிக் கொடுக்க வேண்டிய அமைச்சர், சிறைக்கு செல்ல வேண்டிய நிலை வந்துள்ளது.

அதனால் அவர் அமைச்சர் பதவியை இழந்துள்ளார். இன்னொரு அமைச்சர், சிறையில் இலாகா இல்லாத அமைச்சராக உள்ளார். திமுகவில் உள்ள 11 அமைச்சர்கள் மீது நீதிமன்றத்தில் ஊழல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவர்களில் 3 அமைச்சர்கள் வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்குள் சிறைக்கு சென்று விடுவார்கள்.

பாப நாசம் தொகுதியில் உள்ள எம்எல்ஏ ஜவாஹிருல்லா, கடந்த 2000-ம் ஆண்டில் வெளி நாடுகளில் சட்ட விரோதமாக ரூ.1.54 கோடி பணம் பெற்றதாக சிபிஐ தொடர்ந்த வழக்கில் எப்போது வேண்டுமானாலும் தீர்ப்பு வரலாம். இதில், அவரும் சிறைக்கு செல்வார். இதனால், இந்தத் தொகுதியிலும் எப்போது வேண்டுமானாலும் இடைத்தேர்தல் வருவதற்கான வாய்ப்பு உள்ளது. எனவே, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் புழல் சிறையில் திமுக மற்றும் கூட்டணி கட்சியினருக்காக தனியாக ஒரு பிளாக் ( கட்டிடம் ) கட்டலாம்.

தமிழகத்தில் இயற்கை பேரிடர் நிவாரணமாக மத்திய அரசு 2 ஆண்டுகளில் ரூ.1,713 கோடி வழங்கியது. ஆனால், அதை அரசு செலவு செய்யாமல் உள்ளது. 2024-ல் மத்தியில் மோடி அரசு தொடரவும், தமிழகத்தில் திமுகஅரசை அகற்றுவதற்கும் வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை ஆதரிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

SCROLL FOR NEXT