தூத்துக்குடி: தூத்துக்குடியில் மழை வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்த 22 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணத் தொகையை அமைச்சர் உதயநிதி வழங்கினார்.
தூத்துக்குடி மாவட்டம் பக்கப்பட்டி பகுதிகளில் மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி நேற்று பார்வையிட்டார். தொடர்ந்து பெருங்குளம் பேரூராட்சி நடுவூர், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள மங்களக் குறிச்சி, வாழவல்லான் பகுதிகளில் மக்களை சந்தித்து சேத விவரங்களை கேட்டறிந்தார்.
பெருங்குளம் பேரூராட்சி கீழமங்கலக்குறிச்சியில் உள்ள கோயிலுக்கு மண்டபம் கட்ட நிதி உதவி வழங்கினார். ஏரல் பகுதியில் வணிகர்களை சந்தித்து பாதிப்புகளை கேட்டறிந்தார். சேதமான ஏரல் மேம்பாலத்தை ஆய்வு செய்தார்.
தொடர்ந்து தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி, கனிமொழி எம்.பி. ஆகியோர் கலந்து கொண்டு வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்த 22 பேரின் வாரிசு தாரர்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண உதவி வழங்கினர். வீடுகள் சேதமடைந்த 16 குடும்பங்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் எ.வ.வேலு, பெ.கீதா ஜீவன்,அனிதா ஆர்.ராதா கிருஷ்ணன், ஆர்.காந்தி, பி.மூர்த்தி மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.