தமிழகம்

தூத்துக்குடியில் வெள்ள பாதிப்புகளை ஆளுநர் தமிழிசை பார்வை

செய்திப்பிரிவு

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் கன மழை பாதிப்புகளை தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தர ராஜன் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ”தூத்துக்குடி மாவட்டத்தில் பல பகுதிகள் இன்னும் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. இதைப் பற்றி தமிழக அரசு கவலைப் பட்டதாக தெரியவில்லை. மழை நீரை சேமிப்பதற்கோ, மழை நீரை விவசாயிகள் பயன்படுத்துவதற்கோ தமிழக அரசு என்ன முயற்சி எடுத்துள்ளது?. முதல்வர் இங்கே உள்ள மக்கள் மத்தியில் எத்தனை மணி நேரம் செலவழித்தார்? தென் மாவட்ட மக்களை மாற்றான் தாய் மனப்பான்மையுடன் தமிழக அரசு நடத்துகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து மழை வெள்ளம் பாதித்த தூத்துக்குடி முருகேச நகர், பெட்டல் காடு, ஏரல்,தென் திருப்பேரை குட்டக் கரை, பொன்னன் குறிச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சென்று பார்வையிட்டார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கினார். மாவட்ட பாஜக தலைவர் சித்ராங்கதன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

SCROLL FOR NEXT