தருமபுரி மாணவருக்கு திருச்சி அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்தும் பொருளாதார சிக்கலால் கல்லூரியில் சேர முடியாமல் தவித்து வருகிறார்.
தருமபுரி மாவட்டம் அரூர் வட்டம் கீழ்மொரப்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அஜீத்குமார். அதேப் பகுதியில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் பயின்று 10-ம் வகுப்பில் 448 மதிப்பெண்கள் பெற்றிருந்தார். இதையடுத்து அரூரில் உள்ள மெட்ரிக் பள்ளி ஒன்று அவருக்கு பிளஸ் டூ வரை இலவசக் கல்வி அளித்தது.
பிளஸ் டூ தேர்வில் மாணவர் அஜீத்குமார், 1148 மதிப்பெண்கள் பெற்றிருந்தார். மேலும், 196.5 கட் ஆஃப் பெற்றிருந்த அவருக்கு திருச்சி அரசு மருத்துவக் கல்லூரியில் இடமும் கிடைத்தது. ஆனால் மருத்துவக் கல்லூரிக்கு கட்டணம் செலுத்த முடியாமல் தவித்து வருகிறார்.
இவரது தந்தை செல்வம். கடந்த 12 வருடத்துக்கு முன் மனைவி, குழந்தைகளை தவிக்க விட்டுவிட்டு பிரிந்து சென்று விட்டார். மாணவரின் தாய் மாதம்மாள். தள்ளுவண்டியில் பனியாரக்கடை நடத்தி குடும்பத்தை நடத்தி வருகிறார். பனியாரக் கடையில் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு மூத்த மகன் அஜீத்குமார், இளைய மகன் அசோக்குமார் (9-ம் வகுப்பு) ஆகியோரை படிக்க வைத்து வருகிறார்.
தற்போது மருத்துவக் கல்லூரிக்கு கட்டணம் செலுத்த பொருளாதார வசதி இல்லாமல் தவித்துவரும் அஜீத்குமார், வங்கிக் கடன் விரைவாக கிடைக்க உதவும்படி மாவட்ட ஆட்சியரிடமும் மனு கொடுத் துள்ளதுடன், கருணை உள்ளங்களின் உதவியையும் எதிர்பார்த்து காத்திருக்கிறார். | மாணவர் அஜீத்குமாரின் அலைபேசி எண்: 8098652303