சென்னை: தமிழகத்தில் ஏற்பட்ட பேரிடர்களை பெரிய பாதிப்புகளாகவே மத்திய அரசு கருதவில்லை என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் குற்றம் சாட்டியுள்ளார். இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: மத்தியில் மதவெறி சக்திகள் ஆட்சியிலே உட்கார்ந்து கொண்டு நாடாளுமன்றத்தையும், நாடாளுமன்ற ஜனநாயகத்தையும் குழி தோண்டி புதைத்து வருகின்றன. இதை முறியடிக்க வேண்டும். பகுத்தறிவை வழங்கக் கூடிய கல்லூரிகளும் பள்ளிகளும் சாதிகளை வளர்க்கும் கருவூலமாக மாறி வருவது தடுக்கப்பட வேண்டும். தமிழகத்தில் சாதியற்ற சமூகம் உருவாக வேண்டுமானால், மற்ற மாநிலங்களில் நிறைவேற்றி இருக்கும் பகுத்தறிவு கொள்கை களை பறைசாற்றும் வகையிலான சட்டங்களை, தமிழக சட்டப் பேரவையிலும் நிறைவேற்ற வேண்டும்.
தமிழகத்தில் ஏற்பட்ட பேரிடரை தேசிய பேரிடராக அறிவிக்கிறார்களா, இல்லையா என்பது இங்கு பிரச்சினை இல்லை. இதைமிக முக்கியமான பாதிப்பாக மத்திய அரசு ஏற்றுக்கொள்கிறதா, இல்லையா என்பதுதான் தற்போதைய பிரச்சினை. மத்திய அரசை பொறுத்தவரை, தமிழகத்தில் ஏற்பட்ட பேரிடர்களை பெரிய பாதிப்பாகவே கருதவில்லை. அதனால்தான் இதுவரை நிவாரணத்தை வழங்க தொடர்ந்து மறுத்து வருகின்றனர். இதை வன்மையாக கண்டிக்கிறோம். அரசியலில் நாகரிகமான வார்த்தைகளை பயன்படுத்தவேண்டும் என அமைச்சர் உதய நிதிக்கு அறிவுறுத்துகின்றனர். இதை பாஜக தலைவர்கள்தான் முதலில் கடைபிடிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.