தமிழகம்

பிஏசிஎல் ரூ.1 கோடி சீட்டு மோசடி: மறியலால் அண்ணா சாலையில் போக்குவரத்து பாதிப்பு

செய்திப்பிரிவு

மாதாந்திர சீட்டு நடத்தி ரூ.1 கோடி மோசடி செய்தவர்களை போலீஸார் தேடிவருகின்றனர்.

சென்னை அண்ணாசாலை ஆயிரம்விளக்கு பகுதியில் 'பிஏசிஎல் இந்தியா' என்ற மாதாந்திர சீட்டு நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனத்தில் ஏராளமான கவர்ச்சிகரமான திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. இதை நம்பி சென்னையின் பல பகுதிகளில் இருந்தும் ஏராளமானோர் இந்நிறுவனத்தில் பணத்தை செலுத்தியுள்ளனர். சீட்டு காலம் முடிந்த பின்னரும் பணத்தை திருப்பிக் கொடுக்க இந்நிறுவனத்தினர் காலம் தாழ்த்தியுள்ளனர்.

இந்நிலையில் திங்கள்கிழமை காலை முதல் எந்த அறிவிப்பும் இன்றி சீட்டு நிறுவன அலுவலகம் மூடப்பட்டிருந்தது. இதனால் பணம் கட்டியவர்கள் அதிர்ச்சியடைந்து அந்த அலுவலகம் முன்பு கூடினர். சிறுக சிறுக சேமித்த பணம் பறிபோய்விட்டதே என சிலர் கதறி அழுதனர்.

பிஏசிஎல் நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பணம் கட்டி ஏமாந்தவர்கள் அண்ணா சாலையில் மறியல் செய்தனர். இதனால் திங்கள்கிழமை பிற்பகலில் அண்ணா சாலையில் அண்ணா பாலம் அருகில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. போலீஸார் விரைந்து வந்து அவர்களை சமாதானப்படுத்தி மறியலை கைவிட வைத்தனர். இந்த சம்பவத்தால் சுமார் 3 மணி நேரம் அண்ணா சாலையில் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.

SCROLL FOR NEXT