சென்னை: டாக்டர்கள், இன்ஜினீயர்கள், வழக்கறிஞர்கள் போன்றோரை உருவாக்குவது கல்வி அல்ல. மனிதர்களை உருவாக்குவதே கல்வி என்று உலகத் திருக்குறள் பேரவைத் தலைவர் தவத்திரு பொன்னம்பல அடிகளார் தெரிவித்தார். உலக திருக்குறள் பேரவையின் பொன்விழாவையொட்டி, கவியரங்கம், சான்றோர்களுக்கு விருது வழங்குதல், மாணவர்களுக்கு பரிசு வழங்குதல் ஆகிய முப்பெரும் விழா, சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி இரா.சுரேஷ்குமார் பங்கேற்று, சென்னை பல்கலைக்கழக தமிழ்த் துறை முன்னாள் தலைவர் அரங்க. ராமலிங்கம், எழுத்தாளர் சாந்தகுமாரி சிவகடாட்சம், சென்னை தமிழ் இலக்கிய இயக்க தலைவர் முகில் வண்ணன், விஜிபி உலக தமிழ்ச் சங்கத் தலைவர் வி.ஜி.சந்தோஷம், இரிஷி நேத்ராலயா நிறுவனர் இராம.செல்வரங்கம் ஆகியோருக்கு திருக்குறள் சீர் பரவுவார் விருதை வழங்கினார்.
விழாவில் நீதிபதி பேசும்போது, ‘‘தமிழ் முன்னேற்றம் குறித்து அனைவரும் பேசுகிறோம். அதற்காக அரசு பல்வேறு திட்டங்களை உருவாக்கி செயல்படுத்தி வருகிறது. செம்மொழி அந்தஸ்தும் வழங்கப்பட்டுள்ளது. அரசு எவ்வளவு செய்தாலும் தமிழ் மொழியின் முன்னேற்றத்துக்கு மக்களின் பங்களிப்பு அவசியம். தமிழ் இலக்கியம் படைக்கும் ஆர்வம் மக்களிடம் இருந்து வரவேண்டும். அதற்கு தமிழ் மொழியின் தொன்மை, வரலாறு தெரிய வேண்டும். ஒப்பற்ற இலக்கியங்களை உணர வேண்டும். படைக்கும் சிந்தனை வளர வேண்டும். அதற்கு நாம் தமிழ் கற்க வேண்டும். நம் குழந்தைகளும் தமிழ் கற்க வேண்டும்’’ என்றார்.
விழாவுக்கு தலைமை வகித்த உலகத் திருக்குறள் பேரவைத் தலைவர் தவத்திரு பொன்னம்பல அடிகளார் பேசும்போது, ‘‘மனிதகுலத்தின் அனைத்து சிக்கல்களுக் கும் ஒற்றைத் தீர்வாக, கற்க வேண்டும், அதன்படி நிற்க வேண்டும் என்று திருவள்ளுவர் கூறியுள்ளார். அண்ணா, விவேகானந்தர், பகத்சிங் போன்றவர்கள் தங்க ளது கடைசிகாலம் வரை புத்தக வாசிப்பை வழக்கமாகக் கொண்டிருந்தனர். டாக்டர்கள், இன்ஜினீயர்கள், வழக்கறிஞர்கள் போன்றோரை உருவாக்குவது கல்வி அல்ல. மனிதர்களை உருவாக்குவதே கல்வி. திருக்குறள் நெறியை இளம் தலைமுறையினருக்கு கொண்டு போய் சேர்க்க வேண்டும்’’ என்று கேட்டுக் கொண்டார். முன்னதாக உலக திருக்குறள் பேரவை சென்னை கிளை தலைவர் இரா.கஸ்தூரிராசா வரவேற்றார். நிறைவில் பேரவை வழக்கறிஞர் கலைச்செல்வன் நன்றி கூறினார். பேரவை செயலாளர் கலை.செழியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.