சென்னை: சென்னை, கோவை, பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளில் கல்வி, பணி, தொழில் காரணமாக வசிக்கும் பலரும்பண்டிகை, தொடர் விடுமுறை நாட்களில் சொந்த ஊருக்கு செல்வது வழக்கம்.அந்த வகையில், கிறிஸ்துமஸ் பண்டிகை நாளை கொண்டாடப்படுகிறது. பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு விடுமுறையும் நேற்று முதல் விடப்பட்டுள்ளது. இதனால், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருப்பவர்களும் நேற்று சொந்த ஊருக்கு புறப்பட்டனர்.
குறிப்பாக, சென்னையில் இருந்து சொந்த வாகனங்களில் செல்வோர் நேற்று காலை முதலே பயணத்தை தொடங்கியதால் புறநகர் பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தன.
இதற்கிடையே, சென்னையில் இருந்து திருநெல்வேலி, தூத்துக்குடி, நாகர்கோவில் உள்ளிட்ட இடங்களுக்கு செல்லும் அரசு பேருந்துகளில் முன்பதிவு இருக்கைகள் அனைத்தும் ஏற்கெனவே நிரம்பியதால், உடனடியாக பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்ய முடியாமல் தவித்தனர்.
பண்டிகை நாட்கள் என்பதால், ஆம்னி பேருந்துகளின் கட்டணமும் வழக்கம்போல உயர்த்தப்பட்டது. இதனால் பயணிகள் சிரமப்பட்டனர்.
இதுகுறித்து பயணிகள் சிலர் கூறியதாவது: நேரடியாக திருநெல்வேலி செல்லும் விரைவு பேருந்துகளில் முன்பதிவு செய்ய முடியவில்லை. மதுரை சென்றுஅங்கிருந்து மாறிச் செல்ல வேண்டிய நிலை உள்ளது. திடீரென பயணத்துக்கு திட்டமிடுபவர்கள் இதுபோன்ற இக்கட்டான நிலையில் தவிக்கின்றனர்.
ஆம்னி பேருந்துகளில் இருக்கைக்கே குறைந்தபட்சம் ரூ.2 ஆயிரம்வசூலிக்கப்படுகிறது. இது ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கஇணையதளத்தில் குறிப்பிட்டுள்ளதைவிட அதிகம். அதிகபட்ச கட்டணத்தைவிட அதிகமாகவே வசூலிக்கப்படுவதால் ஊருக்கு செல்ல முடியாத நிலைஇருக்கிறது. ஒவ்வொரு பண்டிகைக்கும் இந்த பிரச்சினை எழுகிறது. அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதுபற்றி போக்குவரத்து துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘தென் தமிழகத்தின் அனைத்து பகுதிகளுக்கும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. விரைவு பேருந்துகளில் மட்டுமே முன்பதிவு இருக்கைகள் நிரம்பியுள்ளன. கோயம்பேடு உள்ளிட்ட பேருந்து நிலையங்களில் இருந்து மற்ற போக்குவரத்து கழகங்கள் சார்பில் வெளியூர் செல்லும் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. அவசர தேவைக்காக சில விரைவு பேருந்துகளும் கையிருப்பில் உள்ளன. கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படுவதால், மக்கள் சிரமமின்றி பயணிக்கலாம். ஆம்னி பேருந்து கட்டணம் தொடர்பாக ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுத்து வருகிறோம்’’ என்றனர்.
ஆம்னி பேருந்து உரிமையாளர்களிடம் கேட்டபோது, ‘‘அதிக கட்டணம்வசூலிக்கும் உரிமையாளர்களை தொடர்ந்து எச்சரித்து வருகிறோம். கூடுதலாக வசூலித்த உரிமையாளர்களிடம் இருந்து பயணிகளுக்கு கட்டணம் திருப்பி வழங்கப்பட்டது’’ என்றனர்.