தமிழகம்

எந்த ஒரு தனி நபரும் மதக் கடமைகளை நிறைவேற்றுவதை யாராலும் தடுக்க முடியாது: உயர் நீதிமன்றம்

செய்திப்பிரிவு

மதுரை: எந்த ஒரு தனி நபரும் அரசியலமைப்பு சட்டம் வழங்கியுள்ள மதக்கடமைகளை நிறைவேற்றுவதை யாராலும் தடுக்க முடியாது என்று உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

விருதுநகர் அருகே திருச்சுழி சேது புரத்தைச் சேர்ந்த சி.பாண்டிய ராஜன், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: எங்கள் கிராமத்தில் 300 குடும்பங்கள் வசிக்கின்றன. இதில் 120 குடும்பங்கள் எஸ்சி வகுப்பினர். எங்கள் கிராமத்தில் செல்லியாரம்மன் கோயில் உள்ளது. இந்த கோயில் திருவிழாவில் எஸ்சி வகுப்பினரை அனுமதிப்பதில்லை.

கோயில் திருவிழாவுக்கு எஸ்சி மக்களிடம் வரி வசூலிப்பதில்லை. கடந்த மே மாதம் திருவிழா நடைபெற்றபோது, திருவிழாவில் தங்களை அனுமதிக்க கோரியதற்காக எஸ்சி வகுப்பை சேர்ந்த சிலரை மற்றொரு சாதியை சேர்ந்தவர்கள் தாக்கினர். இது தொடர்பாக திருச்சுழி போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

பின்னர் திருச்சுழி வட்டாட்சியர் தலைமையில், டிஎஸ்பி முன்னிலையில் 13.6.2023-ல் அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதில் அனைத்து சாதியினரும் திருவிழாவில் பங்கேற்கலாம் என முடிவு செய்ய்பட்டது. இந்நிலையில் கோயிலில் மார்கழி பூஜை நடத்துவது தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில் எஸ்சி மக்கள் சார்பில் பிரதிநிதிகள் பங்கேற்றோம். அப்போது, திருவிழாவில் நாங்கள் பங்கேற்கக் கூடாது, எங்களிடம் வரி வசூலிக்க மாட்டோம் என மற்றொரு சாதி பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

இதனால் 13.6.2023-ல் நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட முடிவை செயல்படுத்தக்கோரி அதிகாரிகளிடம் மனு அளித்தோம். மற்றொரு சாதியினரின் நடவடிக்கையால் எங்களின் வாழ்வாதாரம், அரசியலமைப்பு சட்டம் வழங்கியுள்ள உரிமைகள் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் 13.6.2023-ல் நடைபெற்ற அமைதி பேச்சுவார்த்தை முடிவுகளை அமல்படுத்த உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்து நீதிபதி பி.புகழேந்தி பிறப்பித்த உத்தரவு: சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகளாகியும் சாதியின் பெயரால் கொடுமைகள் தொடர்வதை தடுக்க வேண்டும். எந்த ஒரு தனி நபரும் அரசியலமைப்பு சட்டம் வழங்கியுள்ள மதக் கடமைகளை நிறைவேற்றுவதை யாராலும் தடுக்க முடியாது. கோயில் அறநிலையத் துறையின் பராமரிப்பில் உள்ளது. அறநிலையத் துறைக்கு அனைத்து உரிமைகளும் உள்ளது.

கோயில் திருவிழாவை அறநிலையத் துறை நடத்த அமைதி பேச்சு வார்த்தையில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் மார்கழி திருவிழாவை அறநிலையத் துறை நடத்த வேண்டும். மனுதாரர் கிராமத்தில் தீண்டாமை கொடுமை உள்ளதா? என்பதை கிராம நிர்வாக அலுவலர் மற்றும் வருவாய் அதிகாரிகளிடம் வட்டாட்சியர் விசாரித்து மாவட்ட ஆட்சியரிடம் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

அந்த அறிக்கை அடிப்படையில் மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும். கோயில் திருவிழாவில் எஸ்சி வகுப்பினர் உட்பட அனைத்து சமூகத்தினரும் பங்கேற்பதை உறுதி செய்ய வேண்டும். கோயிலுக்கு தக்கார் நியமிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT