தமிழகம்

நடிகர் ரஜினிகாந்த் ட்விட்டரில் குடியரசு தின வாழ்த்து

செய்திப்பிரிவு

நாட்டின் 69-வது குடியரசுத் தின விழாவை முன்னிட்டு நடிகர் ரஜினிகாந்த் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.

அதில் அவர், "ஜனநாயகம் மலர்ந்த இந்நன்னாளில் அனைவருக்கும் எனது குடியரசு தின நல்வாழ்த்துகள்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

வாழ்த்து மட்டுமே சொல்லும் ரஜினி..

நடிகர் ரஜினிகாந்த் டிசம்பர் 31 2017-ல் தனது அரசியல் பிரவேசத்தை அறிவித்தார். தனிக் கட்சி தொடங்கி சட்டப்பேரவை தேர்தலை சந்திக்கப்போவதாகவும் நாடாளுமன்றத் தேர்தல் குறித்து பின்னர் முடிவெடுக்கப்படும் என்றும் அறிவித்தார். ரஜினியின் அரசியல் பிரவேசம் தமிழகத்தில் பெரும் வாதவிவாதங்களைக் கிளப்பியது.

அரசியல் பிரவேசத்தை அறிவித்துவிட்டு திமுக தலைவர் கருணாநிதி, முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன் ஆகியோரை சந்தித்தார். ஆனால், அதன் பின்னர் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள மிக முக்கியப் பிரச்சினையான பஸ் கட்டண உயர்வு குறித்து அவர் எந்த ஓர் அறிக்கையும் கண்டனமும் தெரிவிக்கவில்லை. அதேபோல், தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டபோது எழுந்து நிற்காத காஞ்சி சங்கராச்சாரியார் விஜயேந்திரருக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை.

அரசியல் பிரவேசத்தை மட்டும் அறிவித்துவிட்டு மக்கள் பிரச்சினையிலோ இல்லை பொதுப் பிரச்சினைகளிலோ கருத்துகூட சொல்லாமல் ரஜினி மவுனம் காப்பது சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்நிலையில், அவர் இன்று குடியரசு தின வாழ்த்துகள் தெரிவித்திருக்கிறார். இதற்கு முன்னதாக பொங்கல் வாழ்த்துகள் தெரிவித்திருந்தார். இவ்வாறாக தொடர்ந்து வாழ்த்துகள் தெரிவிப்பதற்கு மட்டுமே ரஜினிகாந்த் ட்விட்டரை பெரும்பாலும் பயன்படுத்திவருகிறார்.

SCROLL FOR NEXT