சென்னை: போக்குவரத்துக் கழகங்களில் வழங்கப்பட்ட வேலைநிறுத்த அறிவிப்பு தொடர்பாக டிச.27-ல் தொழிற்சங்கங்களுடன் தொழிலாளர்நலத் துறை பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது. இதுதொடர்பாக போக்குவரத்து தொழிற்சங்கங்கள் மற்றும் மேலாண் இயக்குநர்களுக்கு தொழிலாளர் தனி இணை ஆணையர் அனுப்பிய கடிதம்: போக்குவரத்துக் கழகங்களில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, வேலைநிறுத்தம் செய்யப்போவதாக தொழிற்சங்கங்களின் வேலை நிறுத்தஅறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கோரிக்கைகள் தொடர்பாக வரும் 27-ம் தேதி மாலை4 மணியளவில் தேனாம்பேட்டையில் உள்ள தொழிலாளர் தனிஇணை ஆணையர் முன்புபேச்சுவார்த்தை நடக்கிறது.
இதில் தொழிற்சங்கங்கள் மற்றும் நிர்வாகங்கள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும். மேலும், வேலைநிறுத்தம் போன்ற நேரடி நடவடிக்கையில் ஈடுபட வேண்டாம். பொது அமைதி காத்து சுமுக முடிவை எதிர்நோக்குமாறு இருதரப்பினருக்கும் அறிவுறுத்தப் படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. போக்குவரத்துக் கழகங்களின் வரவுக்கும் செலவுக்குமான வித்தியாசத் தொகையை அரசுவழங்க வேண்டும், ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு 99 மாதங்களாக வழங்கப்படாமல் உள்ள அகவிலைப்படி உயர்வை வழங்கவேண்டும், புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட வேண்டும்,ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த வேலைநிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது