தமிழகம்

தென் மாவட்டங்களில் வெள்ள பாதிப்பு: நிர்மலா சீதாராமனுடன் அண்ணாமலை சந்திப்பு

செய்திப்பிரிவு

சென்னை: மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை டெல்லியில் நேற்று சந்தித்தார். தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி உள்ளிட்ட 4 மாவட்டங்கள் அதிகனமழையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. கனமழை காரணமாக தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, ஊருக்குள் வெள்ள நீர் புகுந்தது. இதனால், பலர் தங்களது வீடுகளை இழந்துள்ளனர். மேலும், இந்த 4 மாவட்டங்களில் விவசாய நிலங்களும் முற்றிலுமாக சேதமடைந்துள்ளன. அதேபோல், பொதுச் சொத்துகளும் சேதமடைந்துள்ளன. இந்நிலையில், தென்மாவட்டங்களில் கனமழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சென்று பார்வையிட்டார். அப்போது, பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் கூறி, அதற்கான நிவாரணத்தை பாஜக சார்பில் மத்திய அரசிடம் பெற்று தருவதாக உறுதி அளித்தார்.

அந்தவகையில், மாநிலத் தலைவர் அண்ணாமலை டெல்லி சென்றுள்ளார். அங்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து, தென் மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகள் குறித்து எடுத்துரைத்தார். அப்போது, தென்மாவட்டங்களில் மழை வெள்ள சேதம் தொடர்பாக பாஜக சார்பில் தயார் செய்யப்பட்ட அறிக்கையை நிர்மலா சீதாராமனிடம் வழங்கியதாக தெரிகிறது. மேலும், வெள்ள பாதிப்பு சேதத்தை கணக்கீடு செய்ய மத்திய குழுவை விரைந்து தமிழகத்துக்கு அனுப்பியதற்கு அண்ணாமலை நன்றி தெரிவித்தார். அதேபோல், பொன்முடி வழக்கின் தீர்ப்பு தொடர்பாகவும் பேசியதாக கூறப்படுகிறது. இந்த சந்திப்பின்போது மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தமிழக பாஜக மேலிட இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

SCROLL FOR NEXT