நாகப்பட்டினம்: நாகை மாவட்டம் நாகூர் ஆண்டவர் தர்கா கந்தூரி விழாவில் இன்று (டிச.23) இரவு சந்தனக் கூடு ஊர்வலமும், நாளை (டிச.24) அதிகாலை சந்தனம் பூசும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. விழாவில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துகொள்கிறார். நாகூர் ஆண்டவர் தர்காவில் கந்தூரி விழா கடந்த 14-ம் தேதிதொடங்கியது. 16-ம் தேதி காலை சந்தனக்கட்டை அரைக்கும் நிகழ்ச்சி தொடங்கியது. நேற்று முன்தினம் இரவு வாணவேடிக்கை நடைபெற்றது. இன்று (டிச.23) காலை சந்தனம் பிழிதல், இரவு தஞ்சாவூர் அரண்மனைப் போர்வை மற்றும் தங்கப்போர்வை போர்த்துதல் நிகழ்ச்சிகள் நடைபெறும். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சந்தனக்கூடு ஊர்வலம் இன்று இரவு நாகையில் இருந்து புறப்படுகிறது.
நாகை நகரின் முக்கிய வீதிகள் வழியாக நடைபெறும் சந்தனக் கூடு ஊர்வலம் நாளை (டிச.24) அதிகாலை நாகூர் ஆண்டவர் தர்காவைச் சென்றடையும். அங்கு சந்தனக் குடம் இறக்கப்பட்டு, சந்தனம் பூசும் நிகழ்ச்சி நடைபெறும். முன்னதாக, இந்த விழாவில் பங்கேற்பதற்காக இன்று காலை நாகூர் வரும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு தர்கா நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டு, சிறப்பு துவா ஓதப்படுகிறது. தொடர்ந்து தர்காவில் நடைபெறும் நிகழ்ச்சியில் ஆளுநர் ரவி பங்கேற்கிறார். பின்னர் அவர் அங்கிருந்து காரில் திருச்சி சென்று, விமானம் மூலம் சென்னை திரும்புகிறார்.