உதகை: உதகையில் தனியார் தோட்ட கம்பிவேலியில் சிக்கிய பெண் சிறுத்தை உயிரிழந்தது. நீலகிரி வனக்கோட்டம் உதகை தெற்கு வனச்சரகத்துக்குட்பட்ட தீட்டுக்கல் அருகேவனப்பகுதியில் இருந்து வழி தவறி வந்த சிறுத்தை, குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்தது. தீட்டுக்கல்லில் உள்ள கால்நடை துறைக்கு சொந்தமான பண்ணை அருகே விவசாய தோட்டத்திலுள்ள முள்வேலியில் சிறுத்தையின் கால் சிக்கிக் கொண்டது. இதையடுத்து மாவட்ட உதவி வனப் பாதுகாவலர் தேவராஜ், தீயணைப்பு நிலைய அலுவலர் பிரேமானந்தன் மற்றும் ஆய்வாளர் மணிக்குமார் தலைமையிலான குழுவினர் அப்பகுதிக்கு சென்றனர். கம்பிவேலியில் இருந்து எப்போது வேண்டுமானாலும் சிறுத்தை வெளியே வரும் சூழ்நிலை இருந்ததால், அப்பகுதியில் பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து, வனத்துறை கால்நடை மருத்துவக் குழுவினர் சம்பவ இடத்துக்கு சென்று, துப்பாக்கி மூலமாக சிறுத்தைக்கு மயக்க மருந்து செலுத்தினர். மயங்கிய பின்னர், கம்பிவேலியை அறுத்து சிறுத்தையை மீட்டு கூண்டு மூலமாக சிகிச்சைக்கு கொண்டு சென்றனர். இந்நிலையில், மீட்கப்பட்ட சிறுத்தை சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தது. இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, ‘‘சிறுத்தையை விடுவிக்க காட்டுப் பகுதிக்கு கூண்டு எடுத்துச் செல்லப்பட்டது. மயக்கம் தெளிந்து சிறுத்தை வெளியே வந்ததும் உறுமியது. ஆனால், பின்னங்கால்கள் முற்றிலுமாக செயலிழந்துவிட்டதால், சிறுத்தையால் நிற்க முடியாமல் போனது.
இது, கிளட்ச் வயரால் முதுகெலும்பு நரம்புகளில் ஏற்பட்ட சுருக்கு காயம் காரணமாக இருக்கலாம் என மருத்துவர் தெரிவித்தார். சிறிது நேரத்தில் சிறுத்தை இறந்தது. சிறுத்தை சிக்கிக்கொண்டிருந்த இடத்தில் பரிசோதித்தபோது, அங்கு இருந்த கம்பிவேலியில் ஒரு சிறிய இடைவெளி உள்ளது. அங்கு கிளட்ச் வயர் வைக்கப்பட்டிருந்தது. அந்த வயரில் இந்த சிறுத்தை சிக்கியுள்ளது. இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தப்படுகிறது. பிரேத பரிசோதனைக்கு பின்னர் சிறுத்தையின் உடல் எரியூட்டப்பட்டது’’ என்றனர்.