தமிழகம்

வேதாரண்யம் தொகுதி அதிமுக எம்எல்ஏ ஓ.எஸ்.மணியன் தேர்தலில் வெற்றி பெற்றது செல்லும்: சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு

செய்திப்பிரிவு

சென்னை: கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் வேதாரண்யம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட ஓ.எஸ்.மணியன், 12 ஆயிரத்து 329 வாக்குகள் வித்தியாசத்தில் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளர் எஸ்.கே.வேதரத்தினத்தை தோற்கடித்தார். இந்நிலையில், ஓ.எஸ்.மணியன் வெற்றிபெற்றது செல்லாது என அறிவிக்கக்கோரி திமுக வேட்பாளரான எஸ்.கே.வேதரத் தினம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு ஏற்கெனவே நீதிபதிஎம். தண்டபாணி முன்பாக விசாரணைக்குவந்தது. அப்போது, மனுதாரர் வேதரத்தினம் தரப்பில், அதிமுக வேட்பாளரான ஓ.எஸ்.மணியன், தொகுதி முழுவதும் ரூ. 60 கோடி பணப்பட்டுவாடா செய்து,இருவேறு சமூகத்தினர் மத்தியில் விரோதத்தை தூண்டி, பரிசுப்பொருட்களை வழங்க டோக்கன் விநியோகம் செய்து வெற்றி பெற்றுள்ளார்.

வேதாரண்யேஸ்வரர் கோயிலுக்குச் சொந்தமான நிலத்தில் வசிக்கும் சுமார் 7 ஆயிரம் பேருக்கு பட்டா வழங்கப்படும் என பொய் வாக்குறுதி அளித்தும், நகராட்சிஆணையர், டிஎஸ்பி உள்ளிட்ட அரசு அலுவலர்களை தனது தேர்தல் ஏஜெண்ட் போல பயன்படுத்தியும் வெற்றி பெற்றுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டது. ஆனால் ஓ.எஸ்.மணியன் தரப்பில், தனக்கு எதிராக சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்றும் இந்த வழக்கு அரசியல் ரீதியாக பழிவாங்கும் நோக்கில் தொடரப்பட்டுள்ளது என்றும் வாதிடப்பட்டது. இந்த வழக்கின் தீர்ப்பை கடந்த நவ.20 அன்று தேதி குறிப்பிடாமல் நீதிபதி தள்ளிவைத்திருந்தார். இந்நிலையில் ஓ.எஸ்.மணியனின் தேர்தல் வெற்றியை எதிர்த்த வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதி தண்டபாணி உத்தரவிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT