நடிகரும், திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலினின் மகனுமான உதயநிதி ஸ்டாலின் தீவிர அரசியலில் ஈடுபாட்டைக் காட்டிவரும் நிலையில், திமுக வாரிசு அரசியலை வளர்த்தெடுக்கிறது என்ற வாதவிவாதங்கள் மீண்டும் உயிர் பெற்றுள்ளன.
உதயநிதியின் ஆதரவாளர்களோ அவர் தீவிர அரசியலுக்கு முழு தகுதி பெற்றிருப்பதாகக் கூறும் நிலையில், திமுக விமர்சகர்களோ கடுமையான வாதங்களை முன்வைக்கின்றனர்.
கடந்த சனிக்கிழமை பேருந்து கட்டண உயர்வுக்கு எதிராக திமுக போராட்டம் நடத்தியது. உதயநிதி ஸ்டாலின் தாம்பரத்தில் நடந்த போராட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது அவர், "இனி என்னை அடிக்கடி பொது மேடைகளில் காணலாம்" என்றார். இது அவரது தீவிர அரசியல் பிரவேசத்தின் அறிவிப்பாகவே பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், இது குறித்து திமுகவின் செய்தித் தொடர்பு துறை இணைச் செயலாளர் தமிழன் பிரசன்னா கூறும்போது, "இதை நிச்சயமாக வாரிசு அரசியலாகப் பார்க்க முடியாது. உதயநிதி ஏற்கெனவே மக்கள் பணியாற்றுவேன் எனக் கூறியிருக்கிறார். அவருக்கு கட்சிப் பொறுப்புகள் வழங்குவது மட்டும் மேலிடத்தால் முடிவு செய்யப்படும். உதயநிதியின் அரசியல் பிரவேசம், நிறைய இளைஞர்கள் அரசியலை ஆர்வத்துடன் தேர்ந்தெடுத்து கட்சியுடன் இணைந்து மக்கள் பணியாற்ற விரும்புகின்றனர் என்பதின் அடையாளமே" என்றார்.
ஆனால், கட்சியின் மூத்த தலைவர் ஒருவரோ, "கட்சியில் மூத்த தலைவர்கள் ஓரங்கட்டப்படுகின்றனர் என்பதே உண்மை. மேலும், உதயநிதியின் அரசியல் வருகையை, கட்சிக்காக அரும்பாடுபடும் திமுக அடிமட்டத் தொண்டர்கள் எளிதாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள்" என்றார்.
அரசியல் சர்ச்சைக்கு கிடைத்த தீனி
"திமுகவில் திறமையும், அனுபவமும் மிகுந்த தலைவர்கள் பலர் தங்கள் திறனை நிரூபிப்பதற்காக தருணத்துக்காக காத்து நிற்கின்றனர். அத்தகைய மூத்த தலைவர்களுக்கு உதயநிதியின் அரசியல் பிரவேச அறிவிப்பு ஊக்கத்தை குறைக்கும் செயலாகவே இருக்கும். மேலும், இது எதிர்க்கட்சிகளுக்கு விவாதத்துக்கான தீனியாக இருக்கும்" என பெயர் குறிப்பிட விரும்பாத மூத்த தலைவர் ஒருவர் கூறினார்.
திராவிட இயக்க தமிழர் பேரவையில் பொதுச் செயலாளரும் திமுக அனுதாபியுமான சுப.வீரபாண்டியன் கூறும்போது, "இது உட்கட்சி முடிவு. இது குறித்து யாராவது வருத்தப்பட வேண்டும் என்றால் அது கட்சித் தொண்டர்களாக இருக்கலாமே தவிர எதிர்க்கட்சியினரோ அல்லது வெளியில் இருந்து விமர்சிப்பவர்களோ அல்ல. இது வாரிசு அரசியல் என்ற விமர்சனங்கள் கட்சியின் கொள்கைகளை திசைதிருப்புவதற்கான முயற்சியாகவே பார்க்கப்பட வேண்டும்" என்றார்.
காந்திய மக்கள் இயக்கத்தின் தமிழருவி மணியன் கூறும்போது, "உதயநிதியின் அரசியல் வருகை நிச்சயமாக வாரிசு அரசியலே. இது குடும்ப அரசியலைவிட மோசமானது.
எம்.ஜி.ஆர். பிரபலமாகிக் கொண்டிருந்த காலகட்டத்தில் திமுக தலைவர் கருணாநிதியின் மூத்த மகன் மு.க.முத்துவை முன்னிறுத்தும் பணிகள் நடைபெற்றன. அவருக்காக ரசிகர் மன்றங்கள் உருவாக்கப்பட்டன. ஆனால், எல்லா முயற்சிகளும் தோல்வியில் முடிந்தன. இப்போதும் அதையேத்தான் உதயநிதி விஷயத்தில் திமுக செய்கிறது" என்றார்.
தமிழில்: பாரதி ஆனந்த்.