தமிழகம்

சென்னையில் நீடிக்கும் காஸ் தட்டுப்பாடு: பொதுமக்கள் தவிப்பு

செய்திப்பிரிவு

சென்னையின் பல பகுதிகளில் சமையல் காஸ் கிடைக்காமல் பொது மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் நாள் ஒன்றுக்கு 60 ஆயிரம் சமையல் காஸ் சிலிண்டர்கள் இந்தியன் ஆயில் நிறுவனம் மூலம் விநியோகிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த மாதம் இந்தியன் ஆயில் நிறுவனத்தின் சார்பில் காலாவதியான சிலிண்டர்களை ஆய்வு செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டது.

இதில் காலாவதியான சிலிண்டர்கள் அப்புறப்படுத்தப்பட்டது. இதனால் போதிய சிலிண்டர்கள் இல்லாமல் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட இடங்களில் உள்ள பொது மக்கள் பாதிக்கப்பட்டனர். சமையல் காஸ் சிலிண்டர் பற்றாக்குறையை போக்குவதற்கு இந்தியன் ஆயில் நிறுவனம் சுமார் 1 லட்சம் புதிய சமையல் காஸ் சிலிண்டர்களைக் கொண்டுவந்தும் காஸ் சிலிண்டர் சப்ளை தாமதமாகி வருகிறது.

இதுகுறித்து சூளைமேட்டில் வசிக்கும் சரஸ்வதி என்பவர் கூறும்போது, “ கடந்த ஜூலை 18 ம் தேதி நான் காஸ் சிலிண்டருக்காக பதிவு செய்தேன். ஆனால் இதுவரை எனக்கு சிலிண்டர் கிடைக்கவில்லை” என்றார். காஸ் சிலிண்டர் பற்றக்குறை உள்ள அதே நேரத்தில் மாற்று ஏற்பாட்டிற்காகப் பயன்படுத்தும் மண்ணெண்ணைக்கும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து இந்தியன் ஆயில் நிறுவன அதிகாரி ஒருவர் கூறுகையில், “காலாவதியான சிலிண்டர்களை ஆய்வு செய்யும் பணி 30 சதவீதம் முடிந்துள்ளது. தற்போது எண்ணூர் சமையல் காஸ் சிலிண்டர் நிரப்பும் மையத்தில் இருந்து நாள் ஒன்றுக்கு 150 லாரிகள் மூலம் சென்னையில் சிலிண்டர்கள் விநியோகம் செய்யப்படுகிறது” என்றார்.

SCROLL FOR NEXT