டெல்லி: "எந்த மாநில வெள்ளப் பாதிப்பையும் இதுவரை தேசிய பேரிடராக மத்திய அரசு அறிவித்தது இல்லை" என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
தென்மாவட்ட மழை, வெள்ளப் பாதிப்பு மற்றும் நிவாரண பணிகள் குறித்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று டெல்லியில் தமிழக செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், "தேசிய பேரிடர் என்றும் அறிவிக்கும் சிஸ்டமே இல்லை. தேசிய பேரிடராக மத்திய அரசு இதுவரை அறிவித்ததே இல்லை. இனி அறிவிக்கவும் முடியாது. வேறு எந்த மாநிலத்துக்கும் தேசிய பேரிடர் என்று அறிவித்தது இல்லை.
உத்தராகண்ட் உள்ளிட்ட மாநிலங்களின் மழை, வெள்ளத்தின் போதும் தேசிய பேரிடர் என அறிவிக்கவில்லை. எனவே, தமிழக வெள்ள பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க முடியாது. ஆனால், மாநில அளவில் எடுத்துக்கொண்டால் சம்பந்தப்பட்ட மாநிலப் பேரிடராக அறிவிக்க விரும்பினால் அதற்கான நடைமுறைகளுக்கு மத்திய அரசு உதவும். மத்திய அரசின் பரிந்துரைகளை பெற்று மாநில அரசால் ‘மாநிலப் பேரிடர்’ என அறிவிக்க முடியும். மத்திய நிதி ஆணையத்தின் பரிந்துரைகளை பெற்று மாநில அரசு பேரிடராக அறிவிக்கும் பட்சத்தில் மாநில அரசின் பேரிடர் நிதியில் இருந்து 10 சதவீதத்தை அந்த பேரிடருக்கு பயன்படுத்தவும் முடியும்.
தமிழக அரசு வெள்ள பாதிப்புகளுக்கு நிவாரணமாக ரூ.6000 அளிப்பதில் நான் எதுவும் சொல்ல முடியாது. அது தமிழக அரசின் விருப்பம். ஆனால் கொடுக்கின்ற பணத்தை மக்களின் வங்கிக் கணக்கில் கொடுத்திருக்கலாம். அரசு பணத்தை ஏன் ரொக்கமாக கொடுக்க வேண்டும். ரொக்கமாக கொடுத்தால், அது யாருக்கு கொடுக்கப்பட்டது என்பதில் கணக்கு வைக்க முடியாது. ரொக்கமாக வழங்கியதற்கு பதில் வங்கியில் செலுத்தினால் வெளிப்படைத் தன்மை இருந்திருக்கும்" என்று அவர் தெரிவித்தார்.
மேலும், “சென்னை வானிலை மையம் தென்மாவட்ட மழை குறித்து டிச.12-ம் தேதியே தகவல் கொடுத்துள்ளது. அதிநவீன உபகரணங்கள் உள்ள மையம் சென்னை வானிலை மையம். அந்த மையத்தில் இருந்து தென்மாவட்ட வெள்ளம் ஏற்படுவதற்கு ஐந்து நாட்கள் முன்னதாகவே மாநில அரசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதனால், முன்னெச்சரிக்கை தகவல் கொடுக்கப்படவில்லை என்பது தவறு” என்றவர், “மழை பாதிப்பில் இருந்து மக்களை மீட்க தமிழக அதிகாரிகள் விரைந்து செயல்படவில்லை” என்றும் சில கேள்விகளை முன்வைத்தார். அதன் விவரம் > தென்மாவட்ட அமைச்சர்களும், அதிகாரிகளும் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் சென்றது எப்போது?- நிர்மலா சீதாராமன் கேள்வி