திமுக முன்னாள் அமைச்சர் பொங்கலூர் நா.பழனிசாமி மகன் பைந்தமிழ் பாரி வீட்டில் கர்நாடக லோக் ஆயுக்தா போலீசார் சோதனை நடத்தினர். 
தமிழகம்

திமுக முன்னாள் அமைச்சரின் மகன் வீட்டில் கர்நாடக லோக் ஆயுக்தா காவல்துறை சோதனை: கனிமவள குவாரி விவகாரத்தில் நடவடிக்கை

செய்திப்பிரிவு

கோவை: கனிமவள குவாரி விவகாரம் தொடர்பாக, திமுக முன்னாள் அமைச்சரின் மகன் வீட்டில் கர்நாடக மாநில லோக் ஆயுக்தா காவல்துறையினர் நேற்று சோதனை நடத்தினர்.

கோவை பீளமேடு அருகேயுள்ள, எஸ்.ஓ பங்க் பகுதியைச் சேர்ந்தவர் பொங்கலூர் நா.பழனிசாமி. திமுக முன்னாள் அமைச்சர். இவர், தற்போது திமுகவில் சொத்து பாதுகாப்புக் குழுவின் மாநில துணைத் தலைவராக உள்ளார். இவரது மகன் பைந்தமிழ் பாரி. முன்னாள் கோவை மாநகராட்சி மண்டல தலைவரான இவர், தற்போது திமுக விளையாட்டு மேம்பாட்டு அணியின் துணை செயலாளராக உள்ளார்.

இவர், ராமநாதபுரம் அருகேயுள்ள கிருஷ்ணா காலனியில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார். இவர்களுக்கு சொந்தமாக கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா மாவட்டத்தில் உள்ள உளியார் பகுதியில் சிமென்ட் பேக்டரி உள்ளது. இதற்காக சுண்ணாம்புக் கல் கனிமம் குவாரி ஏலம் எடுத்து நடத்தி வந்தனர். மேலும், அதில் இரும்புத் தாதும் எடுத்து வந்ததாகத் தெரிகிறது.

இதில் விதிமீறல்கள் இருப்பதாக எழுந்த புகாரின் அடிப்படையில், கர்நாடக மாநில லோக் ஆயுக்தா காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுதொடர்பாக பொங்கலூர் பழனிசாமியின் மகன்பைந்தமிழ்பாரியின் வீட்டில் சோதனை நடத்த முடிவு செய்தனர். அதற்காக நீதிமன்றத்திலும் ஆணை பெற்றனர்.

அதைத் தொடர்ந்து, கர்நாடக மாநிலத்தின் லோக் ஆயுக்தா காவல்துறையினர் 15 பேர் கொண்ட குழுவினர் நேற்று கோவைக்கு வந்தனர். கிருஷ்ணா காலனியில் உள்ள பைந்தமிழ்பாரி வீட்டில் நேற்று காலை 8 மணி முதல் மதியம் வரை சோதனை நடத்தினர். அருகேயுள்ள அவரது அலுவலகத்திலும் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனை நேற்று மதியம் நிறைவடைந்தது.

இதுதொடர்பாக முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி கூறும்போது, ‘‘நான் முன்பு கிருஷ்ணாகாலனி வீட்டில் வசித்து வந்தேன். தற்போது எஸ்.ஓ பங்க் பகுதியில் உள்ள வீட்டில் வசித்து வருகிறேன். 1989-ல் இருந்து சித்ரதுர்கா மாவட்டத்தில் உள்ள உளியார் பகுதியில் சிமென்ட் பேக்டரி பயன்பாட்டுக்காக சுண்ணாம்புக் கல் கனிமம் ஏலம் எடுத்து பயன்படுத்தி வந்தோம். இடையே இரும்புத் தாது கொஞ்சம்கிடைத்தது.

10 வருடத்துக்கு முன் மூடப்பட்டது: பின்னர், 10 வருடங்களுக்கு முன்பு உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில் எங்களது கனிமவள குவாரி உட்பட 250 கனிமவள குவாரிகள் மூடப்பட்டன. இச்சூழலில் 10 வருடங்களுக்கு பின்னர் லோக்ஆயுக்தாவில் இருந்து சோதனைக்கு வந்த தாக தெரிவித்தனர். எங்களுக்கு எதுவும் புரியவில்லை. நாங்கள் உரிய முறைகளைப் பின்பற்றிதான் செயல்படுத்தி வந்தோம்’’ என்றார்.

SCROLL FOR NEXT