சென்னை: விளையாட்டு துறையில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கு வழங்கப்படும் மத்திய அரசின் அர்ஜுனா விருதை பெற்ற தமிழக செஸ் வீராங்கனை வைஷாலி, சாகித்ய அகாடமி விருது பெற்ற தமிழக எழுத்தாளர் ராஜசேகரன் உள்ளிட்டோருக்கு தமிழக ஆளுநர், தெலங்கானா ஆளுநர் மற்றும் அரசியல்தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்ட வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:
ஆளுநர் ஆர்.என்.ரவி: நடப்பாண்டு சாகித்ய அகாடமி விருதைப் பெற்ற எழுத்தாளர் ராஜசேகரன் தேவிபாரதி, அர்ஜுனா விருதை வென்ற சதுரங்க கிராண்ட் மாஸ்டர் வைஷாலி, துரோணாச்சாரியர் விருதை பெற்ற ஆர்.பி.ரமேஷ் ஆகியோருக்கு மனமார்ந்த வாழ்த்துகள். மேலும், விளையாட்டுப் பிரிவுவாழ்நாள் சாதனைக்கான தியான்சந்த் விருதுக்கு தேர்வுசெய்யப்பட்ட இந்திய மகளிர் கபடி அணியின்பயிற்சியாளர் கவிதா செல்வராஜுக்கும் சிறப்பு வாழ்த்துகள்.
தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்: அர்ஜுனாவிருதுகளை வென்ற தமிழகத்தின் முதல் பெண் செஸ் கிராண்ட் மாஸ்டர்வைஷாலி, உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் சிறப்பாக பந்து வீசியமுகமது ஷமி மற்றும் பல்வேறு விருதுகளை பெறும் அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள்.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்: மத்திய அரசின் உயரிய விருதுகளைப் பெற்ற தமிழகத்தைச் சேர்ந்த செஸ் வீராங்கனை வைஷாலி, ஸ்குவாஷ் வீரர் ஹரிந்தர் பால் சிங் சாந்து, பயிற்றுநர் ஆர்.பி.ரமேஷ், கபடி விளையாட்டுக்கான பயிற்றுநர் கவிதா செல்வராஜ் ஆகியோருக்கு என்னுடைய பாராட்டுகள். மென்மேலும் பல்வேறு சாதனைகளை புரிந்து தமிழகத்துக்கு பெருமைகளை தேடித் தர வாழ்த்துகிறேன்.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை: விளையாட்டுத் துறையில் 2-வது உயரிய விருதான அர்ஜுனா விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழகத்தின் பெண் கிராண்ட் மாஸ்டர் வைஷாலிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்.
மநீம தலைவர் கமல்ஹாசன்: சாகித்ய அகாடமி விருதை பெற்ற எழுத்தாளர் தேவிபாரதியை மனமார வாழ்த்துகிறேன். 44 ஆண்டுகளாக தமிழ் இலக்கிய உலகில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் அவருக்கு இந்த கவுரவம் மிகவும் பொருத்தமானது.
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்: அர்ஜுனா விருதை வென்றிருக்கும் தமிழகத்தைச் சேர்ந்த முதல் பெண் கிராண்ட்மாஸ்டர் வைஷாலி, துரோணாச்சாரியார் விருதைப் பெற்ற சதுரங்க பயிற்சியாளர் ஆர்.பி.ரமேஷ், வாழ்நாள் சாதனைக்கான தயான் சந்த் விருதை வென்ற தமிழக கபடி பயிற்சியாளர் கவிதா செல்வராஜ் ஆகியோருக்கு எனது மனமார்ந்த பாராட்டுகள்.
ஐஜேகே பொதுச்செயலாளர் பி.ஜெயசீலன்: சாகித்ய அகாடமி விருது பெறும் எழுத்தாளர் தேவிபாரதிக்கும், விளையாட்டுத் துறையில் அர்ஜுனா விருது பெறும் இளம் செஸ் வீராங்கனை வைஷாலி, துரோணாச்சாரியார் விருது பெறும் செஸ் பயிற்சியாளர் ரமேஷ் ஆகியோருக்கு மனமார்ந்த வாழ்த்துகள். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.