ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது அவரின் செயலர்களாக இருந்த 4 ஐஏஎஸ் அதிகாரிகள் நேரில் ஆஜராக நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.
ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையத்தில் பல்வேறு தரப்பினரிடமும் விசாரணை நடத்தப்பட்டு, அவர்களின் சாட்சியம் பதிவு செய்யப்பட்டு வருகிறது.
அதன் தொடர்ச்சியாக ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்படும்போது, அவரது (முதல்வரின்) செயலர்களாக இருந்த 4 ஐஏஎஸ் அதிகாரிகள் அடுத்த வாரம் ஆஜராக விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.
அதன்படி வரும் 30-ம் தேதி முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கே.என்.வெங்கடரமணன், 31-ம் தேதி முதல்வரின் செயலர்- 2 ஆக உள்ள எஸ்.விஜயகுமார், பிப்.1-ம் தேதி கலை மற்றும் பண்பாட்டுத் துறை ஆணையராக உள்ள ஏ.ராமலிங்கம், பிப்.2-ம் தேதி முதல்வரின் செயலர் -4 ஆக உள்ள ஜெயஸ்ரீ முரளிதரன் ஆகியோர் ஆஜராக உள்ளனர்.
அதற்கு அடுத்த வாரம், பூங்குன்றன் வழங்கிய பட்டியலில் இடம்பெற்றுள்ள ஜெயலலிதாவின் உதவியாளர் கார்த்திகேயன், வாகன ஓட்டுநர் ஐயப்பன் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி விசாரிக்க விசாரணை ஆணையம் திட்டமிட்டுள்ளது.
எழுத்துப்பூர்வ அறிக்கை
திருப்பரங்குன்றம் சட்டப்பேரவை தேர்தலின்போது அதிமுக வேட்பாளரின் வேட்புமனுவுடன் வழங்கப்பட்ட ஆவணத்தில் ஜெயலலிதா கைரேகை வைக்கும்போது உடன் இருந்ததாக அரசு மருத்துவர் பாலாஜி சாட்சி கையெழுத்திட்டுள்ளார். அதனால் விசாரணை ஆணையத்தில் இவரது சாட்சியம் முக்கியமானதாகக் கருதப்படுகிறது.
அதனால் இவர் ஏற்கெனவே அளித்திருந்த சாட்சியங்களை அறிக்கையாக அளிக்குமாறு விசாரணை ஆணையம் அறிவுறுத்தியிருந்தது. அதன்படி நேற்று விசாரணை ஆணையத்தில் ஆஜரான மருத்துவர் பாலாஜி, எழுத்துப்பூர்வமான அறிக்கையை தாக்கல் செய்தார்.
பின்னர் அவர் வெளியில் வந்து நிருபர்களிடம் கூறியதாவது:
ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட மருத்துவ சிகிச்சை தொடர்பான குறிப்புகள் குறித்து விசாரணை ஆணையத்தில் தெரிவித்திருக்கிறேன். அதுதொடர்பாக நீதிபதி எழுப்பிய கேள்விகளுக்கு பதில் அளித்தேன். எழுத்துப்பூர்வமாகவும் அறிக்கை தாக்கல் செய்திருக்கிறேன். தேவைப்பட்டால் அடுத்த மாதம் நான் ஆஜராக வேண்டியிருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
எதிர் சாட்சி விபரங்கள்
சசிகலாவுக்கு விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பியிருந்ததைத் தொடர்ந்து, சசிகலா தரப்பில் இரு மனுக்கள் விசாரணை ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்டன. அதில், அனைவரையும் விசாரித்த பிறகு, தனக்கு எதிராக அளிக்கப்பட்ட சாட்சி விவரங்களை வழங்க வேண்டும்.
அதன் பிறகே பதில் அளிக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அந்த மனுக்கள் மீதான இறுதி விசாரணை நேற்று நடைபெற்றது. அதில் சசிகலா தரப்பில் வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் ஆஜராகி வாதிட்டார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
அனைத்து சாட்சியங்களையும் விசாரித்த பின்னர் அது தொடர்பான சாட்சி விவரங்களை எதிர் மனுதாரருக்கு வழங்க வேண்டும் என்பது தொடர்பாக பல்வேறு தீர்ப்புகளை மேற்கோள் காட்டி வாதிட்டிருக்கிறேன். தினகரன் வழங்கிய வீடியோவை சசிகலாதான் எடுத்தார் என்று மனுவில் குறிப்பிட்டிருக்கிறோம்.
தடய அறிவியல் பரிசோதனை
ஜெயலலிதா மருத்துவமனையில் உயிரோடு இருந்தாரா என்பதுதான் இப்போது சந்தேகமாக உள்ளது. அந்த வீடியோவை தடய அறிவியல் பரிசோதனைக்கு உட்படுத்தி உண்மையை வெளிக்கொண்டு வந்திருக்கலாம் என்று வலியுறுத்தி இருக்கிறேன். மனுக்கள் மீதான விசாரணை முடிவடைந்துள்ளது. வரும் 30-ம் தேதி உத்தரவு பிறப்பிப்பதாக நீதிபதி தெரிவித்துள்ளார். நல்ல உத்தரவை பிறப்பிப்பார் என நம்புகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.