தமிழகம்

“தூத்துக்குடியை பாதுகாக்க தொலைநோக்கு திட்டங்கள் இல்லை” - அண்ணாமலை குற்றச்சாட்டு

செய்திப்பிரிவு

தூத்துக்குடி: தூத்துக்குடி மில்லர்புரம் பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து அவர் ஆறுதல் கூறினார்.

தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ”மழை முடிந்து மூன்று நாட்களாகியும், தண்ணீரில் தூத்துக்குடி மிதக்கிறது. மாநகரின் பெரும்பாலான பகுதிகளில் வெள்ள நீர் அகற்றப்படாததால், நிவாரண முகாம்களில் அதிகப்படியான மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். வெள்ள மீட்பு பணிகளில் தமிழக அரசு இன்னும் வேகமாக செயல்பட வேண்டும்.

வெள்ளத்தில் சிக்கியஅமைச்சர் அனிதா ராதா கிருஷ்ணனே, 3 நாட்கள் கழித்துதான் மீட்கப் பட்டிருக்கிறார் என்றால், இந்த அரசு எவ்வளவு வேகமாக செயல்படுகிறது என்பதை தெரிந்து கொள்ளலாம். தூத்துக்குடியில் கடந்த மூன்று நாட்களாக மின்சாரம் இல்லாமல் மக்கள் தவிக் கின்றனர். திருச்செந்தூர் பகுதி இதைவிட இன்னும் மோசமாக உள்ளது.

நிவாரணப் பணிகளை தாமதப்படுத்தினால் மக்களுடைய கோபத்துக்கு இரையாகி விடக்கூடிய சூழ்நிலை உண்டாகும். தூத்துக்குடியை பொறுத்தவரை 80 மீட்டராக இருந்த பக்கிள் ஓடை அகலத்தை 20 மீட்டராக குறுக்கியதால் தற்போது கால்வாயாக உள்ளது. காலம் காலமாக எம்பி., எம்எல்ஏவாக உள்ளவர்கள் மழை நீரை வடிகால் வசதிகளை ஏற்படுத்தி தரவில்லை.

ஆனால், வெள்ளம் வந்தால் மட்டும், இங்குள்ள அரசியல் வாதிகள் வந்தோம். வேட்டியை மடித்துக் கட்டினோம், நிவாரணப் பணிகளை செய்தோம் என சென்று விடுகிறார்கள். தூத்துக்குடியை மழை வெள்ள பாதிப்பில் இருந்து மீட்பதற்கு தொலைநோக்கு திட்டம் இல்லை. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கொடுக்கப்பட்ட பணத்தை திட்டமிட்டு செயல்படுத்தவில்லை. வெள்ளப் பாதிப்பு ஏற்படுவதை தடுத்து நிறுத்த எந்த திட்டமும் இல்லை.

எனவே தூத்துக்குடியை மழை வெள்ளத்தில் இருந்து பாதுகாக்க தொலைநோக்கு திட்டங்களை செயல்படுத்த வேண்டும். வெள்ளத்தால் உயிரிழந்த ஆடு, கோழி முதல் அனைத்தையும் முழுமையாக கணக்கிட்டு பாதிக் கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகளை வழங்க வேண்டும். இவ்வாறு அண்ணாமலை கூறினார்.

SCROLL FOR NEXT