தமிழகம்

நிவாரண உதவிகள் கிடைக்காததால் தூத்துக்குடியில் 2-வது நாளாக பொதுமக்கள் சாலை மறியல்

செய்திப்பிரிவு

தூத்துக்குடி: தூத்துக்குடியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் நிவாரண உதவிகள் கிடைக்கவில்லை எனக் கூறி இரண்டாவது நாளாக நேற்றும் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தூத்துக்குடி மாநகரின் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளதால் மக்கள் வெளியே வரமுடியாமல் திண்டாடுகின்றனர். பால், குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமலும், மின்சாரம் இல்லாமலும் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து நிவாரண உதவிகோரி தூத்துக்குடி - பாளையங்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் 4 இடங்களில் நேற்று முன்தினம் மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் நிவாரண உதவிகள் கிடைக்கவில்லை எனக் கூறி 2-வது நாளாக தூத்துக்குடி 3-வது மைல் பகுதியை சேர்ந்த மக்கள் 200-க்கும் மேற்பட்டோர் நேற்று காலையில் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி சாலை சந்திப்பு பகுதியில் திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீஸார் அங்கு வந்து அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், அவர்கள் ஏற்க மறுத்து போராட்டத்தை தொடர்ந்தனர்.

இந்த நிலையில் அந்த வழியாக வந்த அமைச்சர் கே.என்.நேரு அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். நிவாரண உதவிகள் உடனடியாக கிடைக்க ஏற்பாடு செய்யப்படும் என அவர் உறுதியளித்தார். இருப்பினும் அவர்கள் போராட்டத்தை தொடர்ந்தனர். தொடர்ந்து தூத்துக்குடி மக்களவை தொகுதி உறுப்பினர் கனிமொழி, மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் அங்கு வந்து அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

தேவையான உதவிகள் உடனடியாக கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என எம்பி உறுதியளித்தார். இதனை ஏற்று பொது மக்கள் போராட்டத்தை கை விட்டனர். இந்த போராட்டத்தால் தூத்துக்குடி - பாளையங்கோட்டை சாலையில் நேற்றும் சுமார் 1 மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

திருச்செந்தூரில் மறியல்: திருச்செந்தூர் ஆவுடையார்குளத்தின் கரை பகுதியில் கடந்த3 நாட்களுக்கு முன்பு உடைப்பு ஏற்பட்டு குளத்தில் இருந்து தண்ணீர் வெளியேறியது. இதனால் ஜெயந்திநகர், கோகுல் நகர் அன்புநகர், குமாரபுரம், மாவீரர்நகர், சிவந்திநகர் உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. 5 நாட்களாகியும் தண்ணீர் வடியாததால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

திருச்செந்தூர் - திருநெல்வேலி சாலையில் ஜெயந்திநகர் விலக்கு பகுதியில் பொதுமக்கள் நேற்று திடீர் மறியலில் ஈடுபட்டனர். குளத்தில் உடைப்பு ஏற்பட்ட கரையை அடக்க வேண்டும், தேங்கிய மழை நீரை அப்புறப்படுத்த வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.

நகராட்சி கவுன்சிலர் செந்தில் குமார் மற்றும் தாலுகா போலீஸார் அங்கு வந்து, குளத்தின் கரை பகுதி முழுமையாக அடைக்கப்படும். குடியிருப்பு பகுதியில் சூழ்ந்துள்ள தண்ணீர் அகற்றப்படும் என உறுதி அளித்தனர். இதையடுத்து சுமார் 1 மணி நேரத்துக்கு பின்னர் போராட்டத்தை கைவிட்டு விட்டு மக்கள் கலைந்து சென்றனர்.

SCROLL FOR NEXT