சென்னை: சட்டப்பேரவை நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்பு செய்வது என்பது அரசியலமைப்பு சட்டப்பிரகாரம் கட்டாயம் கிடையாது என உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு கருத்து தெரிவித்துள்ளது.
தமிழக சட்டப்பேரவை நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்பு செய்யக்கோரி தேமுதிக தலைவர் விஜயகாந்த், லோக் சத்தா கட்சி, சட்டப்பஞ்சாயத்து இயக்கம் சார்பில்சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டிருந்தன. இந்தவழக்கில் இடையீட்டு மனுதாரராகஅதிமுக சட்டப்பேரவை கொறடாவான முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியும் இணைந்திருந்தார்.
இந்நிலையில் இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி டி.பரதசக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தலைமை நீதிபதி கூறும்போது, பேரவைத் தலைவருக்கு நோட்டீஸ் கூட அனுப்ப முடியாது என்றும் அவ்வாறு அனுப்பப்படும் நோட்டீஸ் அவரை கட்டுப்படுத்தாது என்றும் கருத்து தெரிவித்தார். மேலும் பேரவை நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்பு செய்வது குறித்து உத்தரவு பிறப்பிக்க முடியுமா என மீண்டும் கேள்வி எழுப்பினார்.
மேலும், பேரவையில் நேரடி ஒளிபரப்பு செய்வது என்பது சூழலைப் பொறுத்தது. சட்டப்பேரவையின் அனைத்து நிகழ்வுகளையும் நேரடிஒளிபரப்பு செய்வது என்பது அரசியலமைப்பு சட்டப்பிரகாரம் கட்டாயம் கிடையாது என கருத்து தெரிவித்தார்.
மேலும் ஒளிபரப்பின்போது எதிர்கட்சியினருக்கு பாரபட்சம் காட்டப்படுவது தொடர்பாக நிரூபிக்க வேலுமணி தரப்புக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜன.23-க்குநீதிபதிகள் தள்ளிவைத்தனர்.