‘யாரையும் எதிர்ப்பது என் நோக்கமல்ல. மக்களுக்கு துணையாக இருப்பதே என் வேலை’ என்று நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். பிப்.21-ம் தேதி தொடங்க உள்ள சுற்றுப்பயணத்துக்கு ‘நாளை நமதே’ என்று பெயர் வைத்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தீவிர அரசியலில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ள கமல்ஹாசன், பிப்ரவரி 21-ம் தேதி முதல் மக்களை சந்திப்பதற்காக சுற்றுப்பயணம் செல்ல திட்டமிட்டுள்ளார். இந்த சுற்றுப்பயணத்தின்போது தனது கட்சியின் பெயர், சின்னம், செயல்பாடுகள் குறித்து அறிவிக்கப் போவதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.
இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
தமிழ்த்தாய் வாழ்த்து
தமிழ்த்தாய் வாழ்த்தை கண்ட இடங்களில் ஒலிபரப்ப வேண்டாம் என்று நான் பல முறை கூறியிருக்கிறேன். எல்லோரும் ஒரே மாதிரி இருக்க மாட்டார்கள். அதனால்தான் தேசிய கீதத்தை திரையரங்குகளில் ஒளிபரப்பு செய்யும்போதும் இதுபோன்ற பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடும் என்று நான் முன்பே சொன்னேன். தியானத்தில் இருந்ததால்தான் தமிழ்த்தாய் வாழ்த்து ஒலிபரப்பும்போது எழுந்து நிற்கவில்லை என்பதையெல்லாம் ஏற்க முடியாது. ஊழலின்போது மக்கள் தியானத்தில் இருந்ததால்தான் அதனை கண்டுகொள்ளவில்லை.
ஆகவே தமிழ்த்தாய் வாழ்த்தை ஒலிபரப்பும்போது தியானத்தில் இருந்தது விஜயேந்திரர் கடமை. எழுந்து நிற்க வேண்டியது என் கடமை.
அரசுப் பேருந்துகளை லாபத்தில்தான் இயக்க வேண்டும் என்று யார் சொன்னார்கள். அரசின் லாபத்துக்காகவும், வருமானம் தருவதற்காகவும் உள்ள துறைகளாக எல்லா துறையும் இருக்க வேண்டும் என்பது அவசியம் இல்லை. ஏழைகளுக்கு உதவி செய்யும் துறைகளை உருவாக்கிக்கொடுப்பது அரசின் கடமை.
உள்ளாட்சி தேர்தல்
பிப்ரவரி 21-ம் தேதி தொடங்கவுள்ள சுற்றுப்பயணத்துக்கு ‘நாளை நமதே’ என்று பெயரிடப்பட்டுள்ளது. அது எம்.ஜி.ஆர் படமாச்சே என்று சிலர் கேட்கிறார்கள். இருக்கட்டுமே. அவரும் இந்தக் கனவைக் கண்டவர்தான். இதை சொல்லும்போது நல்ல ஞாபகங்கள்தானே வருகிறது.
எங்கள் பயணத்தை தொடங்கிய பிறகுதான் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவது குறித்து பேச முடியும். அதுவும் எங்கள் கூட்டமைப்பில் பேசிவிட்டுத்தான் தெரிவிக்க முடியும். நான் மட்டுமே எந்த முடிவையும் எடுத்துவிடக்கூடாது.
மக்கள் நலனே முக்கியம்
ரஜினி மேற்கொள்வது ஆன்மிக அரசியலாக இருந்தாலும் மக்களின் சேவைதான் இங்கே முக்கியம். அந்த அடிப்படையில் திசை ஒன்றுதான். ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி சொல்வார்கள். கோட்பாடுகள், கடமைகளுக்கு இடையூறாக இல்லாமல் நல்ல பணிகளை மக்களுக்கு செய்வதுதான் நம்முடைய நோக்கமாக இருக்க வேண்டும். ஆன்மிக அரசியலிலும் மக்களின் நலனைத்தானே பார்க்க வேண்டும். அந்த நன்மை இருந்தால் போதும். அதைத்தான் நானும் பார்க்கிறேன். எந்த கொள்கையாக இருந்தாலும் அதில் மக்களுக்கு பயன் இருக்க வேண்டும். பெரியார் விபூதி கொடுத்தவர்களையும் அன்பாகவே பார்த்தார்.
கிராமம் தத்தெடுப்பு
‘நாளை நமதே’ பயணத்திட்டத்தில் நிறைய செயல்திட்டங்கள் உள்ளன. அதில் ஒரு வேலையாக ஒரு கிராமத்தை தத்தெடுக்கும் வேலையையும் மேற்கொள்ள இருக்கிறோம். ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்ற அடிப்படையில் அங்கே மேற்கொள்ள உள்ள செயல் திட்டங்கள் இருக்கும். ஒவ்வொரு இடங்களிலும் என்னென்ன தேவைகள் இருக்கிறது என்பதை சுட்டிக்காட்டுவது கடமையாக இருக்கிறது. அதை நிவர்த்தி செய்வது பெருமையாக இருக்கிறது. இந்த பயணத்தில் யாரையும் எதிர்ப்பது என் நோக்கமல்ல. மக்களுக்கு துணையாக இருப்பதே என் வேலை.
இவ்வாறு கமல் கூறினார்.