கனமழையால் பாதிக்கப்பட்ட தென்மாவட்ட மக்களுக்காக சிவகாசி மாநகராட்சி சார்பில் உணவு தயாரிப்பு பணியில் ஈடுபட்டுள்ளோர். 
தமிழகம்

தென் மாவட்டங்களுக்கு சிவகாசி மாநகராட்சி சார்பில் தினமும் 20,000 உணவு பொட்டலங்கள் அனுப்பி வைப்பு

செய்திப்பிரிவு

சிவகாசி: திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தினமும் 20 ஆயிரம் உணவுப் பொட்டலங்களை சிவகாசி மாநகராட்சி நிர்வாகம் அனுப்பி வருகிறது.

திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு பெய்த தொடர் மழை காரணமாக குடியிருப்புகள் மற்றும் பொது இடங்களில் மழை நீர் தேங்கியது. பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இதையடுத்து ஆயிரக் கணக்கான மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்.

கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிவகாசி மாநகராட்சி சார்பில் குடிநீர், பிஸ்கட் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் அனுப்பப்பட்டன. மாநகராட்சி சார்பில் தினமும் 20 ஆயிரம் உணவுப் பொட்டலங்கள் தயாரிக்கப்பட்டு திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன. நேற்று உணவு தயார் செய்யும் பணியை மேயர் சங்கீதா, ஆணையர் கிருஷ்ண மூர்த்தி ஆகியோர் ஆய்வு செய்தனர்.

இது குறித்து ஆணையர் கிருஷ்ண மூர்த்தி கூறுகையில், நகராட்சி நிர்வாக ஆணையரக உத்தரவின்படி தற்போது தினமும் 20 ஆயிரம் உணவு பொட்டலங்கள் தயாரிக்கப்பட்டு, திருநெல்வேலி, தூத்துக்குடி நிவாரண முகாம்களில் தங்கி உள்ள மக்களுக்கு அனுப்பி வைத்து வருகிறோம். மழைநீர் வடியும் வரை தினசரி தேவைக் கேற்ப உணவு பொட்டலங்கள் தயாரிக்கப்பட்டு அனுப்பி வைக்கப்படும் என்று கூறினார்.

SCROLL FOR NEXT