தமிழகம்

ஸ்ரீவைகுண்டம் | வெள்ளத்தில் இருந்து மீட்கப்பட்ட கர்ப்பிணிக்கு குழந்தை பிறந்தது

செய்திப்பிரிவு

மதுரை: ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் இருந்து மீட்கப்பட்ட கர்ப்பிணி அனுசுயாவுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்தது. தற்போது பல இடங்களில் வெள்ள நீர் வடியத் துவங்கியுள்ளது. முன்னதாக, 17 ஆம் தேதி இரவு 8.25 மணிக்கு திருச்செந்தூரில் இருந்து சென்னை எழும்பூருக்கு 800 பயணிகளுடன் திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டது. மழை வெள்ளம் காரணமாக இந்த ரயிலானது ஸ்ரீவைகுண்டத்தில் அன்று இரவு 9.19 மணிக்கு நடுவழியில் நிறுத்தப்பட்டது. இதையடுத்து முதல்கட்டமாக 300 பயணிகள் மீட்கப்பட்டு 4 பேருந்துகள் மற்றும் 2 வேன்கள் மூலம் அருகில் உள்ள அரசு பள்ளியில் பாதுகாப்பாக தங்கவைக்கப்பட்டனர். இந்நிலையில் அந்த வழித்தடத்தில் உள்ள சாலையில் உடைப்பு ஏற்பட்டதால் மீதமுள்ள 500 பயணிகளை மீட்க முடியாத சூழல் நிலவியது.

வெள்ளத்தில் சிக்கிக்கொண்ட ரயிலில் இருந்து உடல்நலக் குறைவு பிரச்சினைகளை எதிர்கொண்ட அனுசுயா என்ற கர்ப்பிணி பெண் உட்பட 4 பேர் முன்னுரிமை அடிப்படையில் விமானப் படையின் ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டனர். இதில், கர்ப்பிணி அனுசுயா பத்திரமாக மீட்கப்பட்டு மதுரைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்ட அனுசுயாவுக்கு இன்று (டிச.20) ஆண் குழந்தை பிறந்தது. தற்போது தாயும், சேயும் நலமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனிடையே, ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் இருந்து மீட்கப்பட்ட பயணிகள் அனைவரும் சிறப்பு ரயில் மூலம் சென்னை உள்ளிட்ட இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் இன்னும் சில மணிநேரங்களில் சென்னையை வந்தடைவர் என்று ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT