தமிழகம்

“எதிர்பார்த்ததை விட அதிக மழை... நிவாரண பணிகளை முடுக்கி விட்டுள்ளோம்” - உதயநிதி

செய்திப்பிரிவு

தூத்துக்குடி: நிவாரண பணிகளை முடுக்கி விட்டுள்ளோம் என, அமைச்சர் உதயநிதி தெரிவித்தார். தூத்துக்குடியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி நேற்று பார்வையிட்டார். தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று பார்வையிட்ட பின், தூத்துக்குடியில் உள்ள நிவாரண முகாமுக்கு சென்று, அங்கு தங்கியிருக்கும் மக்களுக்கு உணவு வழங்கினார். பின்னர் முத்தம்மாள் காலனி உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று மழைநீர் தேங்கிய இடங்களை ஆய்வு செய்தார்.

செய்தியாளர்களிடம் அவர் கூறியது: "மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மாவட்டத்தில் அமைச்சர்கள், அதிகாரிகள் மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். வரலாற்றில்.இல்லாத அளவுக்கு கனமழை பெய்துள்ளது. அரசு மருத்துவமனையில் தரைத் தளத்தில் மட்டும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கிருந்த நோயாளிகள் மாற்றப்பட்டுள்ளனர்.

எங்களால் முடிந்த அளவுக்கு நிவாரண பணிகளை செய்து வருகிறோம். தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இயற்கை பேரிடர் இது.எதிர்பார்த்ததை விட அதிக மழை பெய்துள்ளது. இருப்பினும் மீட்பு மற்றும் நிவாரண பணிகளை முடுக்கி விட்டுள்ளோம்" என்றார் அவர். அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, ராஜ கண்ணப்பன், கீதா ஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் உடனிருந்தனர்.

SCROLL FOR NEXT