சென்னை: தென்மாவட்ட மழை வெள்ள மீட்புப்பணிகள் குறித்து மத்திய அரசின் பல்வேறு துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய ஆளுநர் ஆர்.என்.ரவி, தேவையான அளவு கூடுதல் படையினரை அனுப்பும்படி அறிவுறுத்தியுள்ளார்.
வரலாறு காணாத மழை தென் மாவட்டங்களை தாக்கியது. குறிப்பாக, தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் பெய்த அதீத கனமழையால் இரு மாவட்ட மக்களும் வெள்ள நீரால் சூழப்பட்டுள்ளனர். குறிப்பாக தூத்துக்குடி மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்பு இன்னும் சீரடையாத நிலை உள்ளது.
இதையடுத்து, டெல்லியில் முகாமிட்டுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து நிவாரணப்பணிக்கான உதவியை கோருவதற்கான முயற்சியில் இறங்கியுள்ளார். இந்த சூழலில், நேற்று ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய அரசு அதிகாரிகளுடன் தென்மாவட்ட புயல், வெள்ள நிவாரணம் மற்றும் மீட்பு குறித்து ஆலோசனை நடத்தினார்.
நேற்று பகல் 12 மணிக்கு நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில், ஆளுநரின் செயலர் கிர்லோஷ்குமார், இந்தியவானிலை ஆய்வு மைய தென்மண்டல துணைத்தலைவர் பாலச்சந்திரன் மற்றும் இந்திய ராணுவம், கடற்படை, கடலோர காவல்படை, விமானப்படை மற்றும் தேசிய பேரிடர் மீட்புப்படையின் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.
இதுதவிர, இந்திய செஞ்சிலுவை சங்கம், ரயில்வே, இந்திய விமான நிலையங்களின் ஆணையரகம், பிஎஸ்என்எல், அஞ்சல் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் அதிகாரிகள் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.
இதுகுறித்து ஆளுநர் மாளிகை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தென்மாவட்டங்களில் கூடுதல் படையினரை அனுப்புவது குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டடது. குறிப்பாக திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களின் தற்போதைய நிலை தொடர்பான விவரங்களை துறை அதிகாரிகள் ஆளுநரிடம் பகிர்ந்து கொண்டனர். மத்திய அரசு துறைகளின் அலுவலர்கள் மாநில அரசின் வேண்டுகோளுக்கிணங்க பணியாற்றி வருவது குறித்தும் தெரிவிக்கப்பட்டது. மாவட்ட நிர்வாகங்களின் அறிவுறுத்தல் படி, தங்களால் முடிந்த வரை மீட்பு, நிவாரணப்பணியில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்தனர். இ்ந்திய ராணுவம் 2 குழுக்களையும், இந்திய கடற்படையினர் ஐஎன்எஸ் கட்டபொம்மன் மற்றும் ஐஎன்எஸ் பருந்து ஆகிய கப்பல்களில் இருந்து வீரர்களையும் அனுப்பிஉள்ளது. இந்திய விமானப்படை சூலூர் மற்றும் திருவனந்தபுரம் விமானத்தளத்தில் இருந்து ஹெலிகாப்டர்களை அனுப்பியுள்ளது. இந்திய கடலோர காவல்படையும் தனது மீட்பு வீரர்களை அனுப்பியுள்ளது. அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்புப்படையின் 10 குழுக்கள் பணியமர்த்தப்பட்டுள்ளன.
இந்த கூட்டத்தில், சில மத்திய அரசின் நிறுவனங்கள், சரியான ஒருங்கிணைப்பு இல்லாததால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் தங்களது பணியாளர்களை பணியமர்த்த முடியவில்லை என்றும், அங்கு பணியாற்றி வருபவர்களுக்கு உண்மையான தேவை குறித்த சரியான விவரங்கள் தெரியவில்லை என்றும் கூறியுள்ளனர். இதையடுத்து, அங்குள்ள மோசமான நிலையை கருதி கூடுதல் பணியாளர்களை அனுப்ப வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
இந்த கூட்டத்தில் பங்கேற்க மாநில அரசு பிரதிநிதிகளுக்கு தலைமைச்செயலர் வாயிலாக அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.ஆனால், யாரும் பங்கேற்கவில்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.