சென்னை: டெல்லியில் பிரதமர் மோடியை நேற்று இரவு சந்தித்த முதல்வர் ஸ்டாலின், வெள்ள நிவாரண நிதியை உடனே வழங்க வலியுறுத்தி மனு அளித்தார்.
மிக்ஜாம் புயல், வட தமிழக கடலோர பகுதிகளை நெருங்கி வந்ததால், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் கடந்த 3, 4-ம் தேதிகளில் கனமழை பெய்தது. கடந்த 7-ம் தேதி வெள்ள சேதத்தை மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பார்வையிட்டார். இடைக்கால நிவாரணமாக ரூ.5,060 கோடி வழங்குமாறு பிரதமருக்கு முதல்வர் கடிதம் எழுதினார். இதைத் தொடர்ந்து, மத்திய குழுவினர் 3 நாட்கள் ஆய்வு செய்தனர். இந்த சூழலில், குமரிக்கடலில் உருவான காற்று கீழடுக்கு சுழற்சியால் திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய 4 தென் மாவட்டங்களில் கடந்த 17, 18-ம் தேதிகளில் அதிகனமழை பெய்தது.
இந்நிலையில், இண்டியா கூட்டணி கூட்டத்தில் பங்கேற்பதற்காக முதல்வர் ஸ்டாலின் கடந்த 18-ம் தேதி டெல்லி சென்றார். வெள்ள நிவாரணம் குறித்து ஆலோசிப்பதற்காக பிரதமர் மோடியை சந்திக்க நேரம் கேட்டிருந்தார். அதன்படி, நேற்று இரவு 10.30 மணிக்கு பிரதமர் மோடியை முதல்வர் ஸ்டாலின் சந்தித்தார். தமிழகத்தில் கனமழை, வெள்ளத்தால் வட மாவட்டங்கள், தென் மாவட்டங்கள் அடுத்தடுத்து பாதிக்கப்பட்டிருப்பது குறித்து பிரதமரிடம் முதல்வர் எடுத்துரைத்தார். ஏற்கெனவே தெரிவித்தபடி, தற்காலிக நிவாரணமாக ரூ.7,033 கோடியும், நிரந்தர நிவாரண தொகையாக ரூ.12,659 கோடியும் விரைந்து வழங்குமாறு கோரிக்கை விடுத்தார்.
பேரிடரால் பாதிக்கப்பட்ட தென் மாவட்டங்களுக்கு மட்டும் அவசர நிவாரண நிதியாக ரூ.2,000 கோடியை விரைந்து வழங்குமாறு வலியுறுத்தினார். டி.ஆர்.பாலு எம்.பி. உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.