மேற்கு வங்கத்திலிருந்து துப்பாக்கி, தோட்டாக்களுடன் ரயிலில் வந்த 2 இளைஞர்களை போலீஸார் மடக்கிப் பிடித்தனர்.
மேற்கு வங்கத்திலிருந்து சென்னைக்கு வரும் ரயிலில் சென்னையைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் துப்பாக்கிகளுடன் வருவதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
பயணிகள் உயிருக்கு ஆபத்து நேராமல் அவர்களைப் பிடிக்க போலீஸார் வியூகம் வகுத்தனர்.
வேப்பேரி இன்ஸ்பெக்டர் வீரகுமார் தலைமையில் போலீஸார் அவர்களைப் பிடிக்க வியூகம் வகுத்தனர். ரயில் சென்னை எல்லைக்குள் நுழையும்போதே பிடிக்க முயன்றனர். திருவொற்றியூர் அருகே மடக்க திட்டமிட்டனர்.
திருவொற்றியூர் அருகே போலீஸார் பிடிக்க இருப்பதை அறிந்த இரண்டு இளைஞர்களும் அபாயச்சங்கிலியை பிடித்து இழுத்து ரயிலை நிறுத்திவிட்டு இறங்கி ஓடினர்.
போலீஸார் அவர்களை துரத்திச்சென்று துப்பாக்கி முனையில் மடக்கிப் பிடித்தனர்.
பின்னர் அவர்களை வேப்பேரி காவல் நிலையத்திற்கு அழைத்துவந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்களிடமிருந்து 5 நவீன ரக பிஸ்டல்கள், துப்பாக்கி தோட்டாக்களை போலீஸார் கைப்பற்றினர். ரூ.2 லட்சம் ரொக்கபணத்தையும் கைப்பற்றினர்.
விசாரணையில் இருவர் பெயரும் பிரதீப் மற்றும் கமல் எனத் தெரியவந்தது. திருமங்கலம் மற்றும் பெரம்பூரை சேர்ந்த இருவரும் அஸ்ஸாம் மாநிலம் குவாஹாட்டியிலிருந்து துப்பாக்கியை வாங்கி வந்துள்ளனர்.
அவர்கள் எதற்காக துப்பாக்கி வாங்கி வந்தார்கள்? தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பு உள்ளதா? துப்பாக்கி வாங்கி வந்து அதை சென்னையில் யாருக்காவது விற்க வந்தார்களா? இவர்களுக்கு பின்னனியில் எதாவது கும்பல் இயங்குகிறதா? என்கிற ரீதியில் போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.