கன மழையால் பாதிக்கப்பட்ட தென் மாவட்டங்களுக்கு சென்னை மாநகராட்சி சார்பில் வெள்ள நிவாரணப் பொருட்கள் நேற்று அனுப்பி வைக்கப்பட்டன. இவற்றை மேயர் பிரியா ரிப்பன் மாளிகையில் பார்வையிட்டு கொடியசைத்து அனுப்பி வைத்தார். உடன் மாநகராட்சி ஆணையர் ஜே.ராதாகிருஷ்ணன். படம்: ம.பிரபு 
தமிழகம்

சென்னை மாநகராட்சி சார்பில் 2 வாகனங்களில் தென்மாவட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள்

செய்திப்பிரிவு

சென்னை: சென்னை மாநகராட்சி சார்பில் 2 வாகனங்களில் தென்மாவட்ட மக்களுக்குத் தேவையான நிவாரணப் பொருட்களை மேயர் பிரியா கொடியசைத்து அனுப்பி வைத்தார். கனமழையினால் பாதிக்கப்பட்ட திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட தென்மாவட்டங்களுக்கு சென்னை மாநகராட்சி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட நிவாரணப் பொருட்கள் அடங்கிய 2 வாகனங்களை, சென்னை ரிப்பன் கட்டிட வளாகத்தில் மேயர் பிரியா நேற்று பார்வையிட்டு, கொடியசைத்து அனுப்பி வைத்தார். அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: தென்மாவட்டங்களில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்க அனைத்து துறைகளும் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக, தேங்கிய மழைநீரை அகற்ற 100 எச்பி திறன் கொண்ட 12 டீசல் பம்புகள், 50 எச்பிக்கு கீழ் திறன் கொண்ட 29 டீசல் மோட்டார் பம்புகள் மற்றும் 30 மின் மோட்டார் பம்புகள் என மொத்தம் 71 மோட்டார் பம்புகள் சென்னை மாநகராட்சி சார்பில் தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. மேலும் 29 மோட்டார் பம்புகள் அனுப்பும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மழையால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு ரொட்டி, பிஸ்கெட், பால் பவுடர், குடிநீர் பாட்டில்கள் மற்றும் போர்வை உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை 2 வாகனங்களின் மூலம் அனுப்ப தற்போது ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

இதுதவிர கப்பற்படையின் ஹெலிகாப்டர் மூலமாகவும் நிவாரணப் பொருட்கள் இன்று (டிச.19) காலை அனுப்பப்பட்டது. சென்னை மாநகராட்சியின் இயந்திரப் பொறியியல் துறையில் 4 செயற்பொறியாளர்கள் தலைமையிலான 16 பேர் அடங்கிய 4 குழு, மின்துறையின் சார்பில் செயற்பொறியாளர் தலைமையில் 7 பேர்கொண்ட ஒரு குழு என மொத்தம் 23 பேர் நிவாரணப் பணிகளுக்காக முதற்கட்டமாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் என்றார். மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன், கூடுதல் ஆணையர் ஆர்.லலிதா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

SCROLL FOR NEXT